ஜெயசித்ராவின் பூர்வீகம் ஆந்திராவில் உள்ள காக்கி நாடா. அவர் தந்தை மகேந்திரா ஒரு கால்நடை மருத்துவர். வக்கீலாகவும் பணியாற்றியிருக்கிறார். இவர் வேலை நிமித்தமாக சென்னையில் இருந்ததால் ஜெயசித்ரா பிறந்ததும் வளர்ந்ததும் சென்னைதான். தாயார் ஜெயஸ்ரீ. பெற்றோர் இவருக்கு வைத்த பெயர் லட்சுமி கிருஷ்ணவேணி ரோகினி பார்வதி தேவி.
ஜெயசித்ராவின் தாயார் ஜெயஸ்ரீ நடிகையாக இருந்தவர். இவர் தமிழில் அறிமுகமான படம், 1955-ல் வெளிவந்த 'மகாவீரன்.' தாயார் நடிகையாக இருந்ததால் தனது ஐந்து வயதிலேயே 'பக்தபோதனா' தெலுங்கு படத்தில் குழந்தை நட்சத்திரமானார் ஜெயசித்ரா.
இவரை தமிழில் அறிமுகப்படுத்தியவர் கே.எஸ். கோபாலகிருஷ்ணன். படம் 'குறத்தி மகன்'. கோபாலகிருஷ்ணன்தான் ஜெயசித்ராவுக்கு பெற்றோர் வைத்த சீன சுவர் பெயரை சுருக்கி 'ஜெயசித்ரா' ஆக்கியவர்.
பி. மாதவன் இயக்கத்தில் வெளிவந்த 'பொண்ணுக்கு தங்க மனசு' (1973) படத்தின் மூலம் கதாநாயகியானார். 'பாரத விலாஸ்' படத்தில் சிவாஜியின் மகளாக நடித்தவர் எம்.ஜி.ஆரின் 'நவரத்னம்' படத்தில் 9 கதாநாயகிகளில் ஒருவராக நடித்தார். கமலுக்கு ஜோடியாக ஜெயசித்ரா நடித்தப்படம் ஸ்ரீதரின் 'இளமை ஊஞ்சலாடுகிறது'. பாலசந்தரின் 'அரங்கேற்றம்' மற்றும் 'சொல்லத்தான் நினைக்கிறேன்' படங்கள் இவரை சிறந்த குணச்சித்திர நடிகையாக்கியது. 1983-ம் வருடம் கணேஷ் என்ற தொழிலதிபரை ஜெயசித்ரா மணந்து கொண்டார்.