பிரஷாந்த் திருமணம் - நடிகர் நடிகைகள் வாழ்த்து - விசேஷ படங்களுடன்
01.09.2005
By: Amalan
'வைகாசி பொறந்தாச்சு' நாயகனுக்கு ஆவணி திங்களில், இன்று (1.9.05) கெட்டி மேளம் கொட்டப்பட்டது.
|
சென்னை எம்.ஆர்.சி. நகரில் அமைந்துள்ளது ராமநாதன் செட்டியார் மண்டபம், திருமணம் நடந்த மணமக்களின் முகம் போலவே காலை முதல் கலை கட்டியது. 7.45 முதல் 9.15 மணிக்குள் என்று குறிக்கப்பட்டிருந்த முகூர்த்தத்திற்கு 7 மணியிலிருந்தே வரத்தொடங்கிவிட்டனர் விஐபிகள்.
முதல் ஆளாக வந்த இளம் நட்சத்திரம் சூர்யாதான். ஷூட்டிங் செல்லும் அவசரமோ என்னவோ தாலிகட்டி முடிவதற்குள்ளாகவே மணமகனுக்கு வாழ்த்துச்சொல்லி விடைபெற்றார். 7.45க்கு நல்ல ரம் தொடங்க சம்பிரதாய சடங்கு நிகழ்ச்சிகள் நடந்தன. பிரஷாந்தை மண்டபத்திற்கு வெளியே அழைத்து வந்த பெண் வீட்டார் அவருக்கு பாதம் கழுவி சடங்கு செய்தனர்.
ம்... சொல்ல மறந்துட்டோமே... கலர்புல் காஸ்ட்யூமில் எப்போதும் காட்சிதரும் 'ஜீன்ஸ்' நாயகன் பட்டுவேட்டி பட்டு சட்டையில் மாப்பிள்ளை கோலத்தில் பளபளத்தார். மணமகள் கிரஹலஷ்மி குங்குமநிற பட்டுபுடவை, நெக்லஸ், நெற்றிச்சுட்டி, ஒட்டியாணம், கைக்காப்பு, வளையல்கள் உள்ளிட்ட ஆபரண அழகில் மின்னினார். மணமகனும் மணமகளும் அடுத்தடுத்து தங்கள் பெற்றோருக்கு பாத பூஜை செய்து தீபாராதனை காட்டினர்.
இதனைத்தொடர்ந்து ஹோமம் வளர்க்கப்பட, தனது வாழ்க்கை பார்ட்னர் கிரஹலஷ்மியின் கையில் மஞ்சள் கயிறு கட்டினார் பிரஷாந்த். அதன்பிறகு மந்திரம் முழங்கியபடி ஐயர் கெட்டிமேள சிக்னல் காட்ட, விஐபிகள் அட்சதை தூவ மணமகள் கழுத்தில் தாலி கட்டினார் பிரஷாந்த். படங்களில் நாயகிகளுக்கு தாலி கட்டிய அனுபவமோ என்னவோ பெரியவர்கள் யாரும் சொல்லித்தராமலேயே அந்த காரியத்தை கனகட்சிதமாக செய்தார் பிரஷாந்த்.
தாலிகட்டிய புதுமாப்பிள்ளைக்கு மணமகள் கிரஹலஷ்மி தந்த முதல் பரிசு.... முக்கனியில் ஒன்றான வாழைப்பழத்தை ஊட்டிவிட்டதுதான். அநேகமாக பிரஷாந்திற்கு தொண்டை மட்டுமல்ல அடி மனசுவரை இனித்திருக்கும்.
எல்லாம் சுபமாய் முடிய வந்திருந்த விஐபிகள் வாழ்த்துக்களை சொல்ல கையில் பூங்கொத்துடன் வரிசையில நிற்க ஆரம்பித்துவிட்டனர்.
நடிகர்கள் விஜயகாந்த், சூர்யா, வினித், ஜீவன், நாகேஷ், ராஜேஷ், ஒய்.ஜி. மகேந்திரன், நடிகைகள் சுகன்யா, சுஹாசினி, ப்ரீதா, ரோஜா, சரிதா, இயக்குனர்கள் மணிரத்னம், பாக்யராஜ், சுந்தர் சி., ஹரி, வி. சேகர், ஆர்.கே. செல்வமணி மலேசிய அமைச்சர் டத்தோ சாமிவேல், தமிழக அமைச்சர் செங்கோட்டையன், தொழிலதிபர்கள் ஏ.சி. முத்தையா, நல்லிகுப்புசாமி செட்டி, ஜே.பி.ஆர். இப்படி மணமக்களை வாழ்த்திய பிரபலங்களின் பெயர்களை நீண்ட பட்டியல் போடலாம்.
|