புதியதரம், புதிய நிறம்: 'தோட்டா' பற்றி செல்வா
- 02.02.2008
By Amalan
'நான் அவன் இல்லை' படவெற்றிக்கு பிறகு ஜீவன், 'பருத்திவீரன்' வெற்றிக்கு பிறகு ப்ரியா மணி, ரீமேக் பட வெற்றியைத் தொடங்கி வைத்துள்ள இயக்குநர் செல்வா, அதிரடி இசைமட்டுமல்ல "மெலடி"யும் தனக்கு வரும் என்று நிரூபித்து வரும் ஸ்ரீகாந்த் தேவா. இப்படி வெற்றிக்கூட்டணி இணைந்த படம் 'தோட்டா'.
|
|
|
"ஜீவனின் பாத்திரப் பெயர்தான் தோட்டா. தோட்டா ஒரு ரவுடி. ப்ரியா மணி கல்லூரி மாணவி. இவர்களுக்குள் காதல் துளிர் விடுகிறது. அதை வழக்கமான போக்கில் சொல்லாமல் போன வழியில் செல்லாமல் புது வழியில் திரைக்கதை பின்னியிருக்கிறேன்" என்னும் இயக்குனர் செல்வா மேலும் கூறுவது...
"'தோட்டா' இது என் 18வது படம். என் வாழ்க்கையில் இது ஒரு முக்கியமான படமாக இருக்கும். இதை ஒரு சாதாரண கமர்ஷியல் படம் என்று முத்திரை குத்திவிட வேண்டாம். வேறு ஒரு பாதையில் கதையை பயணம் செய்ய வைத்துள்ளேன். இது அடி தடி, வெட்டு, குத்து என வெறும் உடல் ரீதியான உணர்ச்சியைத் தூண்டும் படமல்ல. மன எண்ணங்களைத் தொடும் உணர்வினைத் தூண்டும் படமிது. படத்தில் புதிய தரத்தையும் நிறத்தையும் காட்ட முயன்றிருக்கிறேன். அதை மக்கள் ஏற்றுக் கொண்டால் பல புதிய முயற்சிகள் வரும்".
சென்னை மற்றும் அதைச் சார்ந்த இடங்களில் கதை நடக்கிறது. பாடல் காட்சிகள் கேரளா, பொள்ளாச்சி பகுதிகளில் படமாகியுள்ளது. சென்னையில் ஒரு மாபெரும் குடோன் செட் போடப்பட்டு படப்பிடிப்பு நடந்துள்ளது.
"படம் தொடங்கி 12 நாள் படப்பிடிப்பும் நடந்தது. பிறகு தொடர முடியாமல் சற்று தாமதமானது. இடைவெளிக்குப் பின் மீண்டும் ஆரம்பித்த போது ஜீவன், ப்ரியா மணி, நான் உட்பட எல்லோருக்கும் வெற்றி வெளிச்சம் கூடியிருந்தது. மூவருக்கும் வணிகத் தகுதி உயர்ந்து இருக்கிறது. எனவே அந்த 12 நாள் எடுத்த காட்சிகளை அப்படியே புறந்தள்ளிவிட்டு பிரதானமான கதையில் மேலும் பிரம்மாண்டம் சேர்த்துள்ளோம். ஆக... இந்தப் படத்தின் தாமதமே இப்போது சாதகமாகியிருக்கிறது". என செண்டிமென்ட் பிழிய பேசுகிறார் செல்வா.
|