இப்படத்தின் கதை,திரைக்கதை வசனம் எழுதி இயக்குனராக அறிமுகமாகிறார் நீலன் கே.சேகர். இவர் இயக்குனர் விஷ்ணுவர்தனிடம் இணை இயக்குனராகப் பணியாற்றியவர்.
'அலிபாபா' படத்தில் கிருஷ்ணா கதாநாயகனாக நடிக்கிறார். தயாரிப்பாளர் பட்டியல் சேகரின் மகனும், இயக்குனர் விஷ்ணுவர்தனின் தம்பியுமான இவர் அமெரிக்காவில் எம்.பி.ஏ. படித்தவர். தவிர தன் அண்ணன் விஷ்ணுவர்தனுடன் இணைந்து மணிரத்னத்தின் 'அஞ்சலி' படத்திலும், மற்றும் இருவர் படத்திலும் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர். சந்தோஷ் சிவன் இயக்கிய டெரரிஸ்ட் படத்திலும் கதாநாயகனாக நடித்தவர் இவர்.
மேற்படிப்புக்காக அமெரிக்கா சென்ற கிருஷ்ணா 'அலிபாபா' படத்தில் நடிப்பதற்காக அங்கு நடிப்பு பயிற்சி பெற்று, இப்படத்தின் நாயகனாகி இருக்கிறார். மும்பையைச் சேர்ந்த ஜனனி என்ற புதுமுகம் கதாநாயகியாக அறிமுகமாகிறார். முக்கிய வேடத்தில் பிரகாஷ்ராஜ் நடிக்க மற்றும், அழகம்பெருமாள், திலகன், ராதாரவி, பிஜூமேனன், காமெடி ஜீவா, மனோபாலா, டி.வி.லட்சுமி ஆகியோர் நடிக்கிறார்கள். தினேஷ்குமார் ஒளிப்பதிவு செய்கிறார். இவர் பிரபல ஹிந்திப்பட ஒளிப்பதிவாளர் வினோத்தின் உதவியாளர்.
வித்தியாசமான தலைப்பைக் கொண்ட ஆக்ஷ்ன் கதை அம்சம் கொண்ட 'அலிபாபா' படத்தின் படப்பிடிப்பு சென்னை, பாண்டிச்சேரியில் தொடர்ந்து நடைபெற்று முடிவடைந்தது. அப்பாவாக பிரகாஷ்ராஜூம், மகனாக கிருஷ்ணாவும் நடிக்கிறார்கள்.
சமீபத்தில் உரத் தொழிற்சாலையில் ஒரு சண்டைக்காட்சி படமாக்கப்பட்டது. அதில் படப்பிடிப்பு நடந்தபோதே யூனிட்டில் உள்ள அனைவருக்குமே உடல்நலமில்லாமல் போனது. ஆனாலும் உடல்நிலையை பொருட்படுத்தாமல் அனைவரும் ஒத்துழைப்பு கொடுத்தது மறக்கவே முடியாது என்கிறார் தயாரிப்பாளர் பட்டியல் சேகர்.
இப்போது தினசரி பத்திரிகையை புரட்டினாலே பெண்களுக்கு இழைக்கப்படும் செக்ஸ் தொல்லைகள் பற்றிய செய்திகள் அதிகம் வருகின்றது. சமூகத்தை அச்சுறுத்தக்கூடிய இந்தப்பிரச்சனையை மையமாக கொண்டதுதான் படத்தின் கதை என்கிறார் இயக்குனர்.
|