நான் காதலிக்கிறேன் ஆனால்... : மனம் திறந்த விஷால்
- 02.05.2008
By Amalan
நயன்தாராவை காதலிக்கிறார், ப்ரியாமணியை காதலிக்கிறார் என தன்னைப்பற்றி வந்த காதல் செய்திக்குப்பிறகு வெளிப்படையாக பதிலளிக்கிறார் விஷால்.
|
|
|
ஸ்ரீ லஷ்மி புரொடக்ஷ்ன்ஸ் சார்பில் டி.அஜய்குமார் தயாரித்த படம் 'மலைக்கோட்டை'. விஷால், பிரியாமணி ஜோடியாக நடிக்க ஜி.பூபதி பாண்டியன் இயக்கியிருந்தார். இந்தப் படத்தின் 125ம் நாள் விழா சென்னையில் நேற்று நடந்தது. தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் ராம நாராயணன் தலைமை தாங்கினார். பட அதிபர் ஏவி.எம்.சரவணன், பிலிம்சேம்பர் தலைவர் கே.ஆர்.ஜி., கே.பாக்யராஜ், பார்த்திபன் முன்னிலை வகித்து படத்தில் நடித்த நடிகர், நடிகைகள், தொழில் நுட்பகலைஞர்கள், விநியோகஸ்தர்கள், தியேட்டர் அதிபர்களுக்கு கேடயம் பரிசளித்தனர். பின்னர் விஷால் பேசியதாவது:-
"மலைக்கோட்டை படத்தின் ஹீரோ, திரைக்கதை தான். ஒரே படத்தில் 4 ஹீரோயின்களுடன் நடிப்பது சாதாரண விஷயமல்ல. ப்ரியாமணி, ஊர்வசி, நிரோஷா, ரேகா என 4 நாயகிகளுடன் இதில் நடித்தது சந்தோஷம். ஒரு விஷயத்தை சொல்ல வேண்டும். 'ப்ரியாமணியை காதலிக்கிறீர்களா?' என்று பத்திரிகையாளர்கள் கேட்கிறார்கள். அவரை காதலிக்கவில்லை. ஒரு பத்திரிகையில் காதலர் தினத்துக்காக செய்தி கேட்டபோது 'யாரையாவது காதலிக்கிறீர்களா?' என்றார்கள். 'ஆம்' என்றேன். யாரை காதலிக்கிறேன் என்று சொல்லவில்லை.
அதற்குள் ப்ரியாமணியை காதலி்க்கிறார். நயன்தாராவை காதலிக்கிறார் என்று எழுதிவிட்டார்கள். நான் காதலிக்கிறேன். ஆனால் ப்ரியாமணியையோ, நயன்தாராவையோ அல்ல. எனக்கு புரட்சி தளபதி என்று ரசிகர்கள் பட்டம் கொடுத்ததை ஏற்றுக்கொண்டேன். ஒரு நடிகருக்கு ரசிகர்கள் தரும் பட்டம் மிக முக்கியம். எந்தவொரு நடிகருக்கும் முதல் 3 நாள் தியேட்டரில் கலெக்ஷ்ன் இருந்தால்தான் விநியோகஸ்தர்கள், தியேட்டர்காரர்களுக்கு திருப்தி அடைவார்கள். அந்த கலெக்ஷ்னை என் படத்துக்கு தந்த ரசிகர்களுக்கு நன்றி".
|