இப்படத்தில் கதாநாயகனாக நிதின் சத்யா, டேனியல் பாலாஜி, கதாநாயகியாக லடசுமி ராய், மஞ்சரி நடிக்கின்றனர். அனீஸ் ஜீவா கதை, திரைக்கதை எழுத, ஸ்ரீநாத் இயக்குகிறார்.
நேற்று நடந்த இப்படத்தின் தொடக்கவிழாவில் ஜீவாவின் நெருங்கிய நண்பரான விக்ரம், ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் உள்ளிட்டோர் கலந்துகொண்டு வாழ்த்தினர்.
விழாவில் விக்ரம் பேசியதாவது :-
"ஜீவா எனது நெருங்கிய நண்பர். அவர் மனைவி அனீஸூம் என் மனைவியும் நல்ல தோழிகள். ஜீவாவுடன் பழகிய நாட்கள் வாழ்க்கையில் மறக்க முடியாது. சினிமாவில் நிறைய சாதிக்க வேண்டும் என்று கனவு கண்டார். அது நிறைவேறத்தொடங்கிய போது இறந்துவிட்டார். அவர் கனவுகளை அனீஸ் நிறைவேற்றுவார். விரைவில் அவர் படமும் இயக்க உள்ளார். தன்னுடைய கதைகளுக்கு பிரபல நடிகர்களை தேடாமல், ஜீவாவைப்போலவே கதை மீது நம்பிக்கைவைத்து படத்தை தயாரிக்கிறார்"என்றார்.
அனீஸ் ஜீவா பேசியதாவது :-
"என் கணவர் ஜீவாவை நான் சினிமாவில்தான் சந்தித்தேன். அவரை இழந்ததும் சினிமாவில்தான். வீட்டிலேயே முடங்கியிருந்தால், அவருடைய நினைவுகள் என்னை அழுத்துகின்றன. அவர் சாதாரண புருஷன் அல்ல. சாதாரண அப்பாவும் அல்ல. என் மீதும், குழந்தைகள் மீதும் உயிராக இருந்தார். அவருடைய இழப்பு, மிகப்பெரிய இழப்பு.
என் குழந்தைகளை வளர்த்து ஆளாக்கவேண்டும். அதற்காகவே கணவர் பெயரில் தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கினேன். இந்த நிறுவனம் சார்பில் தயாராகும் அடுத்த படத்தை நானே இயக்குவேன்" என்றார்.
|