ரயில் நிலையம், விமான நிலையம் போன்ற ஜனநெருக்கம் அதிகமுள்ள பகுதிகளில் நீண்ட நேரம் படப்பிடிப்பு நடத்துவது கடினம். மேலும், சமீபகாலங்களில் இந்தியாவின் ரயில் மற்றும் விமான நிலையங்கள் தீவிரவாதிகளின் தாக்குதல் பட்டியலில் இடம் பிடித்துள்ளன. இதனால் பாதுகாப்பு பிரச்சனைகளும் உண்டு.
மேலே சொன்ன பொது இடங்களில் படப்பிடிப்பு நடத்த அனுமதி கிடைப்பது கடினமாகி வருகிறது. விமான நிலைய காட்சியொன்றிற்கு உள்ளூரில் அனுமதி கிடைக்காமல் துபாய் ஏர்போர்ட்டில் அக்காட்சியை 'சத்யம்' படக்குழு படமாக்கியது.
ஜீவன் நடிப்பதாக இருந்த 'பயணிகளின் கவனத்திற்கு' படம், ரயிலில் படப்பிடிப்பு நடத்த அனுமதி மறுக்கப்பட்டதால், கைவிடப்பட்டது. காரணம், இப்படத்தின் முக்கால்வாசி காட்சிகள் ரயிலில் நடப்பதாக கதையை உருவாக்கியிருந்தார் இயக்குனர். இதனை படமாக்க குறைந்தது ஒரு மாதமாவது வாடகைக்கு ரயில் தேவை. ஆனால், ரயில்வேதுறை அதற்கு தயாரில்லை. அதனால் படமே கைவிடப்பட்டது.
தனுஷ் நடிக்கும் படிக்காதவனிலும் ரயில் நிலைய காட்சியொன்று இடம் பெறுகிறது. அனுமதிக்கு காத்திருந்தால் ஆறுமாதம் ஒடிப்போய்விடு்ம் என்பதை அறிந்தவர்கள், ரயில் நிலையம் போன்று பிரமாண்ட அரங்கை ஹைதரபாத் ராமோஜிராவ் பிலிம் சி்ட்டியில் உருவாக்கியுள்ளனர். லட்சங்கள் செலவானாலும் அனுமதி வாங்கும் அவஸ்தையில்லை. இத்தனை மணி நேரத்தில் படப்பிடிப்பை முடிக்க வேண்டும் என்ற டென்ஷன் இல்லை.
படிக்காதவன் என்றாலும் ஆள் புத்திசாலிதான்!
|