நாம் சொல்வது மாளவிகா நடிக்க மறுத்து ஆர்ப்பாட்டம் செய்தாரே 'கார்த்தீகை' படம், அந்தப் படத்தின் இயக்குனர் வீராவை!
ஐந்து மாத கர்ப்பமாக இருக்கும் எனக்கு கஷ்டமான நடன அசைவுகள் கொடுத்து ஆடச் சொன்னார்கள், தயாரிப்பாளர் ஆஞ்சநேயலு ஆபாசமாக பேசி என்னை தொடப்பார்த்தார் என்றெல்லாம் அடுக்கடு்க்காக புகார் கூறி மாளவிகா கார்த்தீகையில் நடிக்காமல் கம்பி நீட்டியது தெரியும்.
நடிகர் சங்க தலைவர் சரத்குமார் சமாதானம் பேசியும் பிடிவாதத்திலிருந்து இறங்கி வரவில்லை மாளவிகா. குழந்தை பிறக்கட்டும் அப்புறம் நடிப்பது பற்றி யோசிக்கலாம் என்றார் தெனாவட்டாக. இயக்குனர் வீராவும், தயாரிப்பாளர் ஆஞ்சநேயலும் நஷ்டஈடு கேட்டு வழக்கு தொடுப்போம் என்று சலசலத்த பிறகும் வெலவெலக்கவில்லை மாளவிகா.
'கார்த்தீகை'யிலிருந்து மாளவிகாவை நீக்கிவிட்டோம், அவருக்கு பதில் நமிதா நடிக்கிறார் என்று சில நாட்களுக்கு முன் அறிவித்தார் இயக்குனர் வீரா. 'கார்த்தீகை'யில் என்னைத்தவிர யார் நடித்தாலும் கேஸ் போடுவேன் என திருப்பியடித்தார் மாளவிகா. எப்படிப் போனாலும் எதிர்தாக்குதல் தொடுக்கிறாரே என இறுதி முயற்சியாக நேற்று சமாதானக் கொடியை பறக்க விட்டார் வீரா.
அதாவது மாளவிகாவால் ஏற்பட்ட நஷ்டத்திற்கு வழக்கு எதுவும் போடப்போவது இல்லையாம். மாளவிகாவுக்குப் பதில் வேறு நடிகையை நடிக்க வைத்தாலும் மாளவிகாவின் பாடல்காட்சி படத்தில் இடம் பெறுமாம்.
புலியாக உறுமியவர் திடீரென்று எலியாக பதுங்குகிறாரே என்று கேட்டால் மாளவிகா நடிக்க மாட்டேன் என்று சொல்லலையே. கொஞ்சம் லேட்டாக நடிச்சு தர்றேன்னுதானே சொல்றார் என்று ஒரே போடாக போடுகிறார் வீரா.
குப்புற விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டலைங்கிற கதை இதுதானா!
|