'சிவகாசி' கேசட் வெளியீடு - பேரரசு, அசின் பேட்டி / படங்களுடன்
03.10.2005
By: Amalan
தீபாவளிக்கு திரையரங்கில் 'சிவகாசி' சப்தமாக வெடிக்கவுள்ள நிலையில் அதன் முன்னோட்டமாக பாடல்கள் பட்டையை கிளப்ப ஆரம்பித்துள்ளது.
|
கேசட்டுகளும், சிடிக்களும் கடைகளில் விநியோகம் செய்த சில நிமிடங்களிலேயே அமோக விற்பனையாகிவிட்டதாம். இன்று சென்னை க்ரீன் பார்க் ஹோட்டலில் நடந்த 'சிவகாசி' பிரஸ்மீட்டிற்கு வந்த தயாரிப்பாளர் ஏ.எம். ரத்னம் இந்த சந்தோஷ செய்தியை சொன்னபடியேதான் உள்ளே நுழைந்தார்.
கூடவே இயக்குனர் பேரரசு, ஜீன்ஸ் பேண்ட் - டீ சர்ட்டில் அழகு புயலை வீசிய அசின், இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா ஆகியோர் ஆஜர்.
" 'திருப்பாச்சி'யைவிட ஒருபடி மேலே 'சிவகாசி'யை செதுக்கியுள்ளேன். பெண்களுக்கு முழு திருப்தியை கொடுக்கும் படமாக இது இருக்கும்" என்று படத்தின் தரத்தை விளக்கிய பேரரசு, விஜய் - அசின் கேரக்டர் பற்றி விளக்கினார். கேரக்டருடன் ஒரு 'கிக்' பாடலுக்கு நயன்தாரா ஸ்டெப்ஸ் போட்டிருக்கும் நாட்டுக்கு தேவையான செய்தியையும் பகிர்ந்து கொண்டார்.
எல்லா பாட்டையும் நீங்களே எழுதுறீங்களே மற்ற கவிஞர்களுக்கு வழிவிடக்கூடாதா? என்று இயக்குனரிடம் கேட்டால், "என் படத்தில் பாடல் எழுத கவிஞர்கள் தேவையில்லை. சாதாரணமாக வார்த்தையை நிரப்ப தெரிந்திருந்தால் போதும். அதனால்தான் அந்த வேலையை நானே செய்கிறேன். 'கும்பிட போன தெய்வம் குறுக்கே வந்ததம்மா'என்பது சாதாரண வரிகள்தானே அதை எழுத கவிஞர்கள் தேவையில்லையே" இப்படி சொன்ன இயக்குனரிடம், கண்ணதாசன் எழுதிய 'போனால் போகட்டும் போடா' பாடலும் சாதாரண வரிதானே? அப்படியென்றால் அவர் கவிஞர் இல்லையா என்று கிடுக்கிப்பிடிப்போட கிடுகிடுத்து போனது பேரரசுவின் முகம்.
நிலைமையை புரிந்து கொண்ட ஏ.எம். ரத்னம் பக்கத்திலிருந்த பேரரசுவின் தோளை தட்டி ஒரு வழியாக ஆஃப் பண்ணினார்.
அடுத்து அசின் பக்கம் திரும்பியது கேள்வி.
'கஜினி'யில் உங்கள் நடிப்பு சூப்பர். 'சிவகாசி'யில் எப்படி?
'கஜினி'க்கு கொடுத்த பாராட்டு சான்றிதழுக்காக நன்றி தெரிவித்துவிட்டு சிவகாசி கேரக்டர் பற்றி பேசியது கேரள கிளி.
" 'சிவகாசி'யில் கல்லூரி மாணவியா வர்றேன். ரொம்ப சுட்டிப்பெண்ணாக எனது கேரக்டர் உருவாக்கப்பட்டுள்ளது. 'கஜினி'யை விட இதில் கூடுதலாக காமெடி பண்ணியிருக்கேன். கண்டிப்பா எல்லாரும் பார்த்து என்ஜாய் பண்ணுவாங்க" என்று உதட்டை குவித்த அசினை வர்ணித்து ஒரு கவிதை எழுத வேண்டும்போல் இருந்தது.
|