இமேஜின் கிரியேஷன்ஸ் சார்பில் ஆனந்த் சக்கரவர்த்தி தயாரித்து வரும் படம் 'வெண்ணிலா கபடிகுழு'. சுசீந்திரன் இயக்கும் இப்படத்தில் விஷ்ணு கதாநாயகனாக அறிமுகமாகமாகிறார். இவர் போலீஸ் ஐ.ஜி குடவாலாவின் மகன். இவரைத்தவிர பல புது முகங்கள் நடிக்கும் இப்படத்திற்கு கடம் வித்வான் விக்கு விநாயகத்தின் மகன் செல்வகனேஷ் இசையமைத்துள்ளார்.
படத்தின் பாடல் வெளியீட்டுவிழா சென்னையில் நேற்று நடந்தது. விழாவிற்கு இராம நாராயணன் தலைமை தாங்கினார். முதல் பாடலை ஏ.ஆர்.ரஹ்மான் வெளியிட, விக்கு விநாயகம் பெற்றுக்கொண்டார்.விழாவில் நடிகர் விக்ரம், இயக்குனர்கள் கெளதம்மேனன்,எழில், தயாரிப்பாளர் எஸ்.தானு உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு வாழ்த்தினர்.
ஏ.ஆர்.ரஹ்மான் பேசும்போது,'விக்கு விநாயகத்தின் குடும்பம் ஒரு ஞான குடும்பம். அந்த ஞான குடும்பத்தில் ஒருவரான செல்வகனேஷ் இசையமைத்துள்ள இந்த பாடல்கள் அனைத்தும் வெற்றி பெருவதில் சந்தேகம் இல்லை' என வாழ்த்தினார்.
சினிமாவில் கொஞ்சம் அழகும் திறமையும் இருந்தால் நடிகராகிவிடலாம். கொஞ்சம் ஸ்கிரிப்ட் நாலேஜ் இருந்தால் இயக்குனராகிவிடலாம். ஆனால் தயாரிப்பாளராவது ரொம்ப கடினம். அடுத்தவரை நம்பி பணம் முதலீடு செய்வதற்கு தைரியமும், நல்ல மனசும் வேண்டும். அந்த வகையில் புதியவர்களை நம்பி இப்படத்தை தயாரிக்கும் ஆனந்த் சக்கரவர்த்தியை பாராட்டுகிறேன். 'சுப்ரமணியபுரம்' படம் போல இப்படத்தின் வெற்றியையும் எதிபார்க்கிறேன்” என்று கெளதம் மேனன் வாழ்த்தினார்.
”ஒட்டன் சத்திரத்தில் இப்போதும் இயங்கிவரும் வெண்ணிலா கபடிக்குழுவின் உண்மை சம்பவமே இப்படத்தின் கதை. 'லகான்','சென்னை-28' படங்களை போல இதுவும் விளையாட்டை மையமாக கொண்ட கதை என்றாலும் அந்த படங்களுக்கும் இதற்கும் சம்பந்தம் இருக்காது” என்றார் இயக்குனர் சுசீந்திரன்.
|