இவருக்கு இன்னமும் இருக்கும் மார்க்கெட் வேல்யூ பார்த்து இன்றைக்கு மார்க்கெட்டில் இருக்கும் ஹீரோக்களே மிரண்டு போயுள்ளனர்.
1966-ம் வருடம் இவர் நடித்த 'ஆயிரத்தில் ஒருவன்' பிலீஸானது. எம்.ஜி.ஆருடன் ஜெயலலிதா இணைந்து நடித்த முதல்படம். இது வெளியான காலகட்டத்தில் அனைத்து தமிழ் சினிமா ரிக்கார்டுகளையும் நொறுக்கியது.
இந்தப் படத்தை ஜுன்-1 முதல் பிரமாண்ட விளம்பரங்களுடன் சென்னையில் ரிலீஸ் செய்தனர். சிட்டியில் மட்டும் மூன்று தியேட்டர்கள். புதிய தமிழ் படங்கள் ஈயடித்துக் கொண்டிருக்க சுமார் நாற்பது வருடங்களுக்குமுன் ரிலீஸான இந்தப் படத்திற்கோ செம வரவேற்பு.
அபிராமி மஹாலில் இந்தப் படத்திற்கு ஒரே தள்ளுமுள்ளு. அதிலொருவரை ஓரம்கட்டி, ஏன் பழைய படத்துக்கு இத்தனை கூட்டம் என்றோம். இந்த கேள்விக்காகவே காத்திருந்திருப்பார் போல.
"எத்திரினி தபா பார்த்தாலும் தலீவரு படம் போரு கடியாது ஸார்" என்று தொடங்கி அவர் சொன்னதன் சாராம்சம், இதுவரை ஐம்பது முறைக்குமேல் 'ஆயிரத்தில் ஒருவனை' பார்த்திருக்கிறாராம். அதில் வரும் 'அதோ அந்த பறவைபோல....' பாடலுக்காக இன்னும் ஐந்தாறு தபா...ஸாரி, முறை பார்ப்பாராம்.
சென்ற வருடம் எம்.ஜி.ஆரின் 'நாடோடி மன்னன்' படத்தை இப்படி ரிலீஸ் செய்து சென்னை தியேட்டர்களில் ட்ராபிக்ஜாம் ஏற்படுத்தினார்கள். எம்.ஜி.ஆரின் படங்களை மாதம் ஒருமுறை இப்படி ஆர்ப்பாட்டமாக ரிலீஸ் செய்யும் ஐடியாவில் இருக்கிறார்கள் சில விநியோகஸ்தர்கள்!
|