கே.ராஜேஷ்வர் இயக்கும் 'இந்திரவிழா', பாலுமகேந்திரா இயக்கும் 'அனல் காற்று' என ஒரே நேரத்தில் இரு படங்களை தயாரிக்கிறார் அசோக் K.கோத்வானி.
இந்திரவிழா நாயகனாக ஸ்ரீகாந்த், நாயகிகளாக புதுமுகம் ஹேமமாலினி, நமீதா மற்றும் ரகுவரன், விவேக் ஆகியோர் நடிக்கின்றனர். 'அனல் காற்று' படத்தின் கலைஞர்கள் இன்னும் தேர்வு செய்யப்படவில்லை. இசை இளையராஜா என்பதை மட்டும் உறுதி செய்துள்ளார் பாலுமகேந்திரா.
வழக்கமான பூஜைகள் சம்பிரதாயங்களன்றி இப்படங்களின் தொடக்கவிழா இன்று வித்தியாசமாக நடந்தது. இளசுகளின் கண்கவர் நடன நிகழ்ச்சியுடன் தொடங்கிய விழாவில் பாலுமகேந்திரா, கே,ராஜேஷ்வர் இயக்கிய படங்களின் கிளிப்பிங்ஸை திரையிட்டு அவர்களை பற்றிய கௌரவ முன்னோட்டத்தை வழங்கியது சிறப்புமிக்கதாக இருந்தது.
"தமிழ்த் திரையுலகில் இரு முக்கியமான இயக்குனர்களை இந்நிறுவனம் தேர்வு செய்தது பாராட்டுக்குரியது. ராஜேஷ்வர் மிகச்சிறந்த அறிவாளி. சினிமா சம்பந்தப்பட்ட அத்தனை வித்தைகளையும் தெரிந்தவர் அவர். அதேபோல் பாலுமகேந்திராவும்.
உலகப் பேரழகியாக வர்ணிக்கப்படும் லைலா நிஜத்தில் அப்படியொன்றும் அழகியில்லையாம். பார்ப்பதற்கு கறுப்பாகவும், மூக்கு தட்டையாக இருப்பாராம். ஒரு நாள் மஜ்னுவிடம் அவரது நண்பர்கள் 'இவளையா நீ காதலித்துக் கொண்டிருக்கிறாய்' என்று கேட்டார்களாம்
அதற்கு மஜ்னு சொன்ன பதில், 'நீங்கள் என் கண்களால் அவளை பார்த்தால்தான் புரியும்' என்றானாம். அப்படித்தான் உலக அழகை பாலுமகேந்திராவின் கண்களால் பார்க்கவேண்டும். இந்த இருவரையும் வைத்து படம் தயாரிப்பது என்பது இரட்டை குதிரை பூட்டிய வண்டியில் சவாரி செய்வதுபோல" என தனது வாழ்த்துரையில் புகழ்மாலை சூட்டினார் வைரமுத்து.
"இயக்கத்திலிருந்து ஒதுங்கி சினிமா பள்ளிக்கூடம் ஆரம்பிக்கலாம் என்று இருந்தேன். அதற்கு கொஞ்சம் காலதாமதம் ஆனது. அப்போது ராஜேஷ்வரை சந்தித்தேன். சினிமா பள்ளி தொடங்கினால் ஒரு ஆசிரியனாக ஒடுங்கிப்போய்விடுவீர்கள் அதனால் மீண்டும் இயக்கத்திற்கு வாருங்கள் என்று அழைத்தார். எனக்கும் அது சரியெனப்பட்டது. ராஜேஷ்வர்தான் எனக்கு 'அனல்காற்று' படத்தின் வாய்ப்பை பெற்றுந்தந்தார் என ஏற்புரை நிகழ்த்தினார் பாலுமகேந்திரா.
விழாவில் இந்தியன் வங்கியின் முன்னாள் தலைவர் கோபாலகிருஷ்ணன், இயக்குனர் ராஜ்குமார் சந்தோஷி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
வி.ஐ.பி.க்களின் உரையாடலைத் தாண்டி அதிகமாக கவனத்தை ஈர்த்தது நமீதாதான். காரணம் என்னவென்பதை சொல்லி தெரியவேண்டுமா என்ன?
|