நேமி சந்த் ஜபக் தயாரிப்பில் மதுரவன் இயக்கியுள்ள படம் 'பாண்டி'. லாரன்ஸ், சினேகா, நமீதா நடித்துள்ள இப்படத்திற்கு ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்துள்ளார். படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா சென்னை ஏவி.எம்.திரையரங்கில் நேற்று நடந்தது.
பாடல் கேசட்டை தனுஷ் வெளியிட, சந்தியா பெற்றுக்கொண்டார். சிடியை பரத் வெளியிட, பேரரசு பெற்றுக்கொண்டார். முன்னதாக சாம்பிளுக்கு இரண்டு பாடல்கள் திரையிடப்பட்டது. இதில் 'மாசி மாசம் ஆளான பொண்ணு' ரீ-மிக்ஸ் பாடலில் லாரன்சுடன் சினேகா ஆடிய ஆட்டம் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
கவர்ச்சிக்கும் சினேகாவிற்கும் இடையே கிலோமீட்டர் கணக்கில் இடைவெளி என்ற ரசிகப்பெருமக்களின் கருத்தெல்லாம் தூள்தூளாகும் வகையில் சினேகாவின் அங்க அசைவுகள் ச்சீ...போடவைத்தது.
இது இப்படி என்றால் லாரன்சும் - நமீதாவும் ஆடும் குத்து பாடலில் பேரரசு எழுதியிருந்த கொட்ட கொட்ட ஸாரி கெட்ட கெட்ட வார்த்தைகள் உச்சபச்ச அருவருப்பை தந்தது. வாழ்த்துரையின்போது மைக்கை பிடித்த பேரரசு "இயக்குனர் மதுரவன் எனது நண்பர் அவருக்காக நான் ஒரு பாடலை எழுத சம்மதித்தேன்" என பெருமையாகவும் சொல்லிக்கொண்டது வேடிக்கையாக இருந்தது.
இந்த கெட்ட விஷயங்களையெல்லாம் மறந்துபோகும் வகையில் ராகவா லாரன்ஸ் செய்த நல்ல காரியம் ஒன்று நடந்தது.
32 ஏழை குழந்தைகளுக்கு இருதய அறுவை சிகிச்சை செய்வதற்கான முயற்சியில் இருக்கிறாராம் லாரன்ஸ். அதற்கான உதவித்தொகையாக ஒரு லட்சம் ரூபாய்க்கான காசோலையை லாரன்சிடம் வழங்கினார் தயாரிப்பாளர் ஜபக்.
|