சென்னை அண்ணாசாலையில் வாய்பேசாத - காது கேளாதோருக்காக லிட்டில் ப்ளவர் பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் பயிலும் குழந்தைகளுக்கு எதிர்காலம் பற்றிய நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் கணிணி பயிற்சி, அழகு கலை மற்றும் ஆடை வடிவமைப்பு உள்ளிட்ட பயிற்சி வகுப்புகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இதன் தொடக்கவிழா நேற்று நடந்தது. நடிகை தியா அந்த பயிற்சி வகுப்புகளை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். அப்போது வாய் பேசாத - செவித்திறன் குறைந்த மாணவிகள் தியாவுக்கு அலங்காரம் செய்துவிட அதனை அன்புடன் ஏற்றுக்கொண்டார்.
பின்னர் குழந்தைகள் மத்தியில் பேசிய தியா, "வாழ்க்கையில் எல்லோருக்கும் எல்லா நேரத்திலும் நம்பிக்கை அவசியமாகிறது. அந்த வகையில் இங்கு தொடங்கப்பட்டிருக்கும் பயிற்சி வகுப்புகள் உங்களுக்கு உறுதுணையாக அமையும். நானும் அழகு கலை மற்றும் பேஷன் டெக்னாலஜி பற்றி படித்திருப்பதால் அது பற்றி உங்களுக்கு தேவையான ஆலோசனை மற்றும் பொருள் உதவிகளை செய்ய காத்திருக்கிறேன்" என்று உறுதி சொல்ல, குழந்தைகளிடையே உற்சாக வெள்ளம்.
இதனையடுத்து தியாவுக்கு அன்பு பரிசளித்த குழந்தைகள் அவரை சுற்றி வட்டமிட, குழந்தைளின் அன்பு பிடியில் சிக்கி குதூகலமிட்டார் தியா.
|