படத்தின் வெற்றிவிழா சென்னையில் நடந்தது. தயாரிப்பாளர்கள் சங்கத்தலைவர் இராம.நாராயணன், நடிகர் சங்கத்தலைவர் சரத்குமார், நடிகர் ஸ்ரீகாந்த், நடிகை சாயாசிங், இயக்குனர்கள் பாக்யராஜ், விசு, ஜெகநாதன், பாடகர் பி.பி.ஸ்ரீநிவாஸ், இசையமைப்பாளர் பரத்வாஜ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு வாழ்த்தினர்.
படத்தின் நாயகன் பார்த்திபன் விழாவில் பங்கேற்கவில்லை. படம் ரிலீசாவதற்கு முன்பே தயாரிப்பாளருக்கும் இவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடே இதற்கு காரணம். இப்படத்தின் பாடல் வெளியிட்டு விழாவைப்போலவே நூறாவது நாள் விழா மேடையில் அம்மன் சிலை அமைத்து கோயில் போன்ற செட் போடப்பட்டிருந்தது. முந்தைய விழாவில் குஷ்பு செருப்புகாலுடன் அமர்ந்திருந்தது பிரச்சனையாக்கப்பட்டது நினைவிருக்கலாம். எனவே இவ்விழாவில் மேடையின் கீழேயே வி.ஐ.பி களை காலணிகளை கழற்றிவருமாறு வேண்டுகோள் வைக்கப்பட்டது.
பாக்யராஜ் பேசியபோது,” உலகத்தில் எல்லோருக்கும் பாசமான தந்தை கிடைப்பார்கள். ஆனால் வசதியான தந்தை கிடைப்பது அரிது. அந்த வகையில் மதுமிதா கொடுத்துவைத்தவர்தான். இந்த படத்தில் எனது சிஷ்யன் பார்த்திபன் நடிக்க ஒப்புக்கொண்டபோதே, மதுமிதா திறமைசாலியானவராக இருப்பார் என தோன்றியது. எனது நம்பிக்கை சரிதான் என்பதற்கு இந்த வெற்றிவிழா சாட்சியாக இருக்கிறது” என்று வாழ்த்தினார்.
ஏற்புரை நிகழ்த்திய இயக்குனர் மதுமிதா "இந்த படத்தை இயக்குவதற்கு முன்பு சினிமாவில் பெண்கள் நுழைவது கஷ்டம். அவர்கள் பல பிரச்சனைகளையும் சந்திக்கவேண்டிய நிலை வரும் என்று பலரும் எனக்கு அறிவுரை வழங்கினர். ஆனால் வந்தபிறகுதான் எவ்வளவு ஆதரவு இருக்கிறது என்பது புரிகிறது. இவ்வளவு ஆதரவு இருக்கும்போது நான் மட்டுமல்ல இன்னும் நூறு பெண்கள் இத்துறைக்கு வருவார்கள்.” என்றார்.
முன்னதாக வரவேற்புரை நிகழ்த்திய தயாரிப்பாளர் சுந்தர்ராமன், ” கிரிகுஜா பிலிம்ஸ் இனி பிரைவேட் லிமிடெட் நிறுவனமாகிறது. முதல் கட்டமாக மூன்று படங்களை தயாரிக்க திட்டமிட்டுள்ளோம். முதல் படத்தை மதுமிதா இயக்குகிறார். கிரேசி மோகன் கதை, வசனத்தில் அந்த படம் காமெடி படமாக உருவாகவுள்ளது. இதனைத் தொடர்ந்து சரத்குமார் நடிப்பில் அதிரடி ஆக்ஷன் படத்தையும், சஞ்சய் ராம் இயக்கும் ஒரு படத்தையும் தயாரிக்கிறோம்” என தெரிவித்தார்.
|