படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான வாசுபாஸ்கர் கதை, திரைக்கதை,வசனம் எழுதி இயக்குனராக அறிமுகமாகிறார். கதாநாயகனாக அனிருத் என்ற புதுமுகம் அறிமுகமாகிறார்.இவர் ஜெய்ஜு என்ற பெயரில் ஏற்கனவே சில மலையாள படங்களில் நடித்துள்ளார். இதுதவிர தற்போது பாக்யராஜ் இயக்கிவரும் ‘புதியவார்ப்புகள்’ படத்திலும் நடித்துள்ளாராம்.
கதாநாயகியாக லண்டனை சேர்ந்த ஜோஸ்னா அறிமுகமாகிறார். பல வருடங்களுக்கு முன் கவிஞர் வாலி இயக்கிய ‘வடைமாலை’ படத்தின் கதாநாயகியான சரோஜாவின் மகளாம் இவர். இன்னொரு நாயகியாக கேரளாவின் பிரபல மாடலான வாணிகிஷோர் நடிக்கிறார்.
தமிழ்நாட்டிலுள்ள ஒரு பையனுக்கும் இலங்கையை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் இடையே ஏற்படும் காதல்தான் படத்தின் கதையாம். மருத்துவக் கல்லூரியின் பின்னணியில் நடக்கும் கதை, லண்டனில் தொடங்கி லண்டனில் முடிவதுபோன்று திரைகதை அமைக்கப்பட்டுள்ளதாம். லண்டனில் இதுவரை யாரும் படமாக்காத லொக்கேஷன்களில் படப்பிடிப்பை நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக கூறும் இயக்குனர், ஒரு பாடல் காட்சியை ஆறு ஐரோப்பிய நாடுகளில் படமாக்கப்படவுள்ளதாக தெரிவித்தார்.
லண்டன் தவிர, சென்னை, பாண்டிச்சேரி ஆகிய இடங்களிலும் படப்பிடிப்பு நடத்தப்படவுள்ளதாம். ஸ்ரீகாந்த்தேவா இசையமைக்க, கண்ணன் ஒளிப்பதிவு செய்கிறார்.
படத்தின் தொடக்கவிழா, சென்னை கிரீன் பார்க் ஹோட்டலில் இன்று காலை நடந்தது. இயக்குனர்கள் பாக்யராஜ், அமீர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு வாழ்த்தினர்.
|