ரேவதி வர்மா இயக்கத்தில் ஜோதிகா, குஷ்பு, சரிதா நடிக்கும் 'ஜூன் R' படத்தின் பாடல் கேசட் விழா சென்னையில் நடந்தது.
விழாவில் 'இவருடைய பாட்டுக்கு நான் அடிமை' என்று சமீபத்தில் முதல்வர் வாயால் புகழப்பட்ட சங்கீத சக்ரவர்த்தி பாலமுரளிகிருஷ்ணாதான் முக்கிய விஐபி. இவரது கரங்களால் முதல் கேசட்டை வெளியிட அதனை பெற்றுக்கொண்டார் பாடகி உஷா உதூப். காஞ்சிபுரம் பட்டுப்புடவை சரசரக்க விழாவில் கலந்துகொண்ட உஷாஉதூப் அடிக்கடி பாலமுரளிகிருஷ்ணாவின் காலில் விழந்து ஆசிர்வாதத்தை பெற்றுக்கொண்டபோது பாலமுரளிகிருஷ்ணா முகத்தில் பரவசம்.
"தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய எல்லா மொழி திரைப்படங்கிலலும் பாடியுள்ள நான் ஒரு காலத்தில் நடிகனாகவும் இருந்திருக்கிறேன். ஒரு தெலுங்கு படத்தில் முதன்முதலில் எனக்கு கிடைத்தது நாரதர் வேடம்தான். அதனைத்தொடர்ந்து எனக்கு நாரதர் வேடமே கிடைத்தது. அதனால் நான் நடிப்பதற்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டேன். ஏன் தெயுமா? நாரதராக நடிப்பவருக்கு ஜோடி கிடையாது" என நகைச்சுவை ததும்ப பேசினார்.
வந்தே மாதரம் பாடலை பாடி காட்டி அசத்திய உஷாஉதூப், "முப்பத்தைந்து வருஷமா பாடிகிட்டு இருக்கேன். இன்னும் ஒரு விருது கிடைக்கல. நான் பாடிய பாடல்களுக்கெல்லாம் பெரும்பாலும் காபரே டான்சர்தான் ஆடியிருக்காங்க" என ஏக்கத்தை வெளிப்படுத்தியபோது பக்கத்திலிருந்த இயக்குநர் ரேவதி வர்மா, "நான்கூட கல்லூரி மேடையில் உங்களோட பாட்டுக்கு காபரே ஆடியிருக்கேன்" என்றபோது உஷாஉதூப் உதிர்த்த சிரிப்பிலும் சங்கீதம் சலசலத்தது.
படத்திற்கு இசையமைத்த சரத், பாலமுரளிகிருஷ்ணாவின் உதவியாளராக இருந்தவராம். படத்தின் பாடல்களை ஒலிபரப்பியபோது சிஷ்யனின் இசையை கண்மூடி ரசித்தார் குரு.
படத்தில் நடித்திருக்கும் மூன்று நாயகிகளில் ஒருவர் மட்டுமே விழாவில் கலந்துகொண்டார். அவர் குஷ்பு. ஒரு பக்கம் கையில் கட் செய்யப்பட்ட ஜாக்கெட்டில் வந்தவர் புகைப்படக்காரர்களுக்கு சூப்பர் தீனி போட்டார்.
நிகழ்ச்சியில் ஒளிப்பதிவாளர் மதுஅம்பட், பாடலாசிரியர் முத்துக்குமார் உட்பட பலர் கலந்துகொண்டனர். தயாரிப்பாளர் அன்சாரி சிறப்பு விருந்தினர்களை பொன்னாடை அணிவித்து வரவேற்றார்.
|