காஜா மொய்தீனின் ரோஜா கம்பைன்ஸ் நல்ல பல படங்களை தயாரித்துள்ளது. கடைசியாக அஜித், விஜய காந்தை வைத்து தலா ஒருபடம் தயாரித்தார் காஜா மொய்தீன்.
அவரது கெட்ட நேரம் இரண்டு படங்களும் சூப்பர் பிளாப். கழுத்துவரை கடன். இந்த நேரத்தில் கமலின் கால்ஷீட் வேறு காஜா மொய்தீனிடம் இருந்தது. கடனோடு கடனாக கவுதம் மேனன் இயக்கத்தில் கமல் நடிக்க 'வேட்டையாடு விளையாடு' படத்தை தொடங்கினார்.
இதில் தயாரிப்பாளர்களுக்கு மட்டுமே வரும் பல சிக்கல்கள். அதிலிருந்து மீள முடியாமல் தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார் காஜா. பிறகு 'வேட்டையாடு விளையாடு' படத்தை செவன்த் சானல் மாணிக்கம் நாராயணன் வாங்கி தயாரித்து வெளியிட்டது தெரிந்த கதை.
காஜா மொய்தீன் தயாரிப்பிலிருந்து விலகி சில காலம் ரியல் எஸ்டேட் பிஸினஸ் செய்து வந்தார். கடன்கள் ஒருவாறு தீர்ந்த பிறகு காஜாவுக்கு மீண்டும் கலைத்தாகம் எடுத்துள்ளது. விரைவில் இவரது ரோஜா கம்பைன்ஸ் படங்களை தயாரிக்க உள்ளது. முதல் படத்தின் ஹீரோ சுந்தர் சி. இப்போதைக்கு இந்த ஒரு விஷயம் மட்டுமே உறுதி செய்யப்பட்டுள்ளது.
|