சூப்பர் குட் ஆர்.பி. சௌத்ரி தயாரிப்பில் 'இயற்கை' ஜனநாதன் இயக்கும் 'ஈ'யில் வித்தியாசமாக வேடம் போடுகிறார் ஜீவா. படத்தின் தொடக்கவிழா இன்று நடந்தது.
தான் தயாரிக்கும் படங்களின் பூஜையை ஆர்ப்பாட்டம் இல்லாமல் நடத்திவந்த சௌத்ரி இம்முறை செல்ல மகனுக்காக நிறையவே மாறியிருந்தார். எடை போட்டால் கிலோவை தாண்டும் வெயிட்டான அழைப்பிதழில் ஆரம்பித்து பிரமாண்டமான செட் வரை போட்டு ஆடம்பரமாக 'ஈ' விழாவை நடத்தினார்.
ஏவிஎம். ஏ.சி. ப்ளோரில் நடந்த விழாவை கமல்ஹாசன் குத்துவிளக்கேற்றி தொடங்கிவைத்தார். அதனைத்தொடர்ந்து அஜித் - விஜய் இருவரும் இணைந்து விளக்கேற்றி வைத்தனர். சூப்பர்குட்டின் ஆஸ்தான நாயகனான சரத், நாயகி நயன்தாரா, சிலம்பரசன், பார்த்திபன் உள்பட நட்சத்திரங்கள் பலரும் கலந்துகொண்டு ஜீவாவை வாழ்த்தினர்.
கமல் பேசும்போது "பலரது வாழ்விலும் விளக்கேற்றி வைத்த சௌத்ரி சாரின் பட விழாவை குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்ததை பெருமையாக நினைக்கிறேன். குழந்தை நட்சத்திரமாக தனது கலைப் பயணத்தை ஆரம்பித்த ஜீவா, வருங்காலத்தில் பெரிய நடிகராக வளர வாழ்த்துகிறேன்" என்றபோது சந்தோஷத்தில் மிதந்தார் ஜீவா.
சரத்குமார் பேசியபோது, " 'சூர்யவம்சம்' படத்தில் என் பேரனாக நடித்த ஜீவா இப்போது பெரிய நடிகனாக வளர்ந்து நிற்கிறார். குழந்தை பருவத்திலேயே தனது திறமையை நிரூபித்த ஜீவா, கமல்சார் போல பெரிய நடிகராக வளர்வார் என்ற நம்பிக்கை இருக்கிறது" என்று வாழ்த்தினார்.
இயக்குனர் எஸ்.பி. முத்துராமன் வாழ்த்தியபோது 'ஈ' என்ற டைட்டிலுக்கு பொருத்தமாக 'ஈதல் இசைபட வாழ்தல்' என்னும் திருக்குறளை கூறி வாழ்த்தினார்.
விழா நிகழ்ச்சிகளை குசும்பாக தொகுத்து வழங்கிய கே.எஸ். ரவிக்குமார், பிரகாஷ்ராஜை பேச அழைக்கும்போது 'ஐ லவ் யூ டா...' என்று கமெண்ட் அடிக்க, மைக்கை பிடித்த பிரகாஷ்ராஜ் 'நன்றிடா செல்லம்...' என்று பதில் கமெண்ட் அடிக்க, சிரிப்பலை அடங்க வெகுநேரமானது.
வந்திருந்து வாழ்த்தியவர்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செய்த ஜீவா முடிவில் ஏற்புரை வழங்க நன்றி தெரிவித்துக்கொண்டார் சௌத்ரி.
|