காய்கறி வியாபாரத்தில் கை வைத்தவர்கள், கோடிகளில் லாபம் தரும் திரைப்படத்துறையை விட்டு வைப்பார்களா? இதோ... யானை பலத்துடன் கோடம்பாக்கத்தில் கால் பதித்திருக்கிறார்கள்.
யு டிவி நிறுவனம் செல்வராகவனுக்கு மூன்று படங்கள் இயக்க அடவான்ஸ் கொடுத்துள்ளது. இதே நிறுவனத்துக்கு ஒரு படம் இயக்கித்தருகிறார் கவுதம். ஆக, இப்போதைக்கு யு டிவியின் கணக்கு நான்கு.
வீட்டில் விட்டத்தை பார்த்துக் கொண்டிருக்கும் கஸ்தூரிராஜாவுக்கு லக்கி பிரைஸ் அடித்திருப்பதாக கேள்வி. யு டிவி இவரிடம் 5 படங்களை தயாரிப்பதற்கான பொறுப்பை தந்துள்ளதாம். இந்த செய்தி இன்னும் உறுதி செய்யப்படவில்லை.
வார்னர் பிரதர்ஸ் ஆக்கர் ஸ்டியோவுடன் இணைந்து பத்துப் படங்கள் தயாரிக்கிறது. 'பில்லா பார்ட் டூ'வும் இதில் அடக்கம்.
'கிரீடம்' மூலம் தமிழுக்கு வந்த அட்லாப்ஸ், ஆக்கர் ஸ்டுடியோவுடன் இணைந்து 'சுல்தான் தி வாரியர்' அனிமேஷன் படத்தை தயாரிக்கிறது. அத்துடன் மாதவனை வைத்து மேலும் நான்கு படங்களை தயாரிக்க ஒப்பந்தம் போட்டுள்ளது. அட்லாப்ஸ் தயாரிப்பில் மாதவனை இயக்கப் போகும் அந்த நான்கு இயக்குனர்கள் யார் என்பதை முடிவு செய்ய ஆலோசனைகள் முடுக்கி விடப்பட்டுள்ளதாம்.
இவை தவிர பிரமிட் சாய்மீராவும், ஐங்கரன் பிலிம்ஸ் இன்டர்நேஷனல்சும் வாரம் ஒரு படம் என்ற ரேஞ்சில் தயாரிப்பில் இறங்கியுள்ளது.
இனி வாழை தோப்பை விற்று நாற்பது லட்சத்துடன் ஊரிலிருந்து கிளம்பி படம் எடுக்க வரும் குப்பனும் சுப்பனும் எல்லாம் கோடம்பாக்கத்தில் குப்பை கொட்ட முடியாது. ஏனெனில்,
இது கார்ப்பரேட்களின் காலம்!
|