சினிமாவில் நேற்று முளைத்த காளான்களே அகில இந்திய தலைமை ரசிகர் மன்றம் என பில்டப் பீதாம்பரமாக தங்களை காட்டிக் கொள்ளும் காலமிது. ஆனால் அனைத்து தகுதிகளையும் தன்னகத்தே கொண்ட உலக நாயகனோ ஒரு நாளும் தன்னை முன்னிறுத்திக் கொள்ளாத தன்னடக்கத்திற்கு சொந்தக்காரராக விளங்குகிறார்.
தன்னை ரசிக்கும், தன்னை நேசிக்கும் எவரும் விசிலடித்தான் குஞ்சுகளாகவும், வெற்று ரசிகனாகவும் இல்லாமல் நற்பணியாளனாக இருக்கவேண்டும் என்ற அடையாளத்தை ஏற்படுத்திய முதல் நடிகன் கமலாகத்தான் இருக்கும். எனவே ரசிகர் மன்றம் என்பதைகூட மாற்றி நற்பணி இயக்கமாக வழிநடத்தி வருகிறார்.
கமலின் இந்த எண்ணத்திற்கு எதிர் நோக்கில் சென்றுகொண்டிருப்பதாக மாநில நிர்வாகி ர.குணசீலன் மீது புகார் வந்துள்ளதாம். மன்ற பணிகளை சரிவர செய்யாமலும், மன்றத்தின் செயல்பாடு மற்றும் உறுப்பினர்கள் பற்றிய தகவல்களை கமலிடம் சரியான நேரத்தில் கொண்டுபோய் சேர்க்க தவறிவிட்டதாகவும் குணசீலன் மீது மன்றத்தின் பிற நிர்வாகிகள் குறைபட்டுக் கொண்டதாக கூறப்படுகிறது. இதனால் கமல் நற்பணி இயக்க நிர்வாகி பொறுப்பிலிருந்து குணசீலன் நீக்கப்படுவதாக கமல் அறிவித்துள்ளார்.
இது குறித்து இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கமல் கூறியுள்ளதாவது :-
தமிழக கமல்ஹாசன் நற்பணி இயக்க நிர்வாகியாக வேலை செய்து வந்த ர.குணசீலன். தென்சென்னை மாவட்ட பொறுப்பாளர் டி.ஜான் மற்றும் நாமக்கல் மாவட்ட செயலாளர் ஏ.ராஜூ ஆகியோர்கள் அப்பொறுப்பிலிருந்து 13-08-2008 புதன்கிழமை முதல் நீக்கப்படுகிறார்கள்.
மேற்கொண்டு மாவட்ட, நகர, கிளை இயக்கச் சகோதரர்கள், அவர்களிடம் எந்தவிதமான தொடர்பும் வைத்துக் கொள்ளவேண்டாம் என்றும், புதிய நிர்வாகி நியமிக்கும் வரை எப்பொழுதும் போல் நமது நற்பணிகளை தொடர்ந்து செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
|