சமீபத்தில் நடந்த சினிமா நிகழ்ச்சியொன்றில் ஏ.ஆர்.ரஹ்மானை விமர்சித்துப் பேசினார் அமீர். பாலசந்தர், பாரதிராஜா போன்ற அனுபவசாலிகளின் படங்களுக்கு இசையமைக்கும் ஏ.ஆர்.ரஹ்மான் ஏன் எங்களைப் போன்றவர்களின் படங்களுக்கு இசையமைப்பதில்லை? எங்களைப் பார்த்தால் இயக்குனர்களாக தெரியவில்லையா என்று விமர்சித்தவர் ஏ.ஆர்.ரஹ்மான் உணர்வுப்பூர்வமான படங்களுக்கு இசையமைக்க முன்வராதது ஏன் என்றும் கேள்வி எழுப்பினார்.
ஏ.ஆர்.ரஹ்மான் இல்லாத நிகழ்ச்சியொன்றில் அமீர் எழுப்பிய இந்த கேள்விகள் ரஹ்மான் ரசிகர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
ரஹ்மான் அனுபவசாலி இயக்குனர்களுக்கு மட்டுமின்றி அறிமுக இயக்குனர்களின் படங்களுக்கும் இசையமைத்துள்ளார் என்கிறார்கள் அவர்கள். 'சில்லுனு ஒரு காதல்', 'அழகிய தமிழ் மகன்', 'சக்கரகட்டி' படங்களெல்லாம் அந்த இய்ககுனர்களின் முதல் படங்கள்தான் என உதாரணம் காட்டுகிறார்கள்.
தீபா மேத்தாவின் ஃபயர் வாட்டர், அமீர்கானின் லகான், ரங்தே பசந்தி எல்லாம் உணர்வுப்பூர்வமான படங்களாக அமீருக்கு தெரியவில்லையா என அவர்கள் ஆவேசப்படுகின்றனர்.
பருத்திவீரன் வெற்றிக்குப் பிறகு மணிரத்னம், கமல், ரஹ்மான் என பிரபலங்களை குறிவைத்து அமீர் தாக்கி வருவதாகவும் அவர்கள் குற்றம் சாட்டினர். ஒரு வெற்றிக்கே இந்த அலட்டலா என்பது அவர்கள் கேள்வி.
என்ன பதில் சொல்லப் போகிறார் அமீர்?
|