அய்யனார் சிலை முன் ஆட்டம் போட்ட ஜோடிகள்
- 18.07.2008
By Amalan
16 நாட்களில் முக்கால்வாசி படத்தை எடுத்து முடித்துவிட்ட இயக்குனர் இளங்கண்ணனை உச்சி முகர்ந்து பாராட்டுகின்றனர் ராஜ் டெலிவிஷன் நெட்வொர்க் நிறுவனத்தினர். இந்நிறுவனம் தயாரித்துவரும் 'காதல்னா சும்மா இல்ல' படத்தைத்தான் இளங்கண்ணன் இயக்கி வருகிறார்.
|
|
|
'சின்ன வீடா வரட்டுமா, பெரிய வீடா வரட்டுமா' பாட்டுக்கு தேஜாஸ்ரீயை ஆடவிட்டு அழகுபார்த்த 'ஒற்றன்' படத்தின் இயக்குனர்தான் இந்த இளங்கண்ணன். நீண்ட இடைவெளிக்குப் பிறகு இப்படத்தை இயக்குகிறார். 'கம்மியம்' என்ற பெயரில் தெலுங்கில் வெளிவந்து சக்கைப்போடு போட்டுக் கொண்டிருக்கும் படத்தின் தமிழ் ரீ-மேக்தான் 'காதல்னா சும்மா இல்ல'.
இப்படத்தில் கதாநாயகர்களாக ரவிகிருஷ்ணாவும், சர்வானந்தும் நடிக்க, 'வேட்டையாடு விளையாடு' புகழ் கமாலினி முகர்ஜிதான் நாயகி.
படத்தில் ரவிகிருஷ்ணாவுடன் தேஜாஸ்ரீ ஆடும் குத்துப்பாடல் ஒன்று இடம் பெறுகிறது. இதற்காக பிரசாத் ஸ்டுடியோவில் பிரமாண்டமான செட் போடப்பட்டு படமாக்கப்பட்டது. கிராமத்து கோயில் திருவிழா பின்னணிக்காக இருபதடி உயரத்தில் விழிகளை பிதுக்கி மிரட்டும் அய்யனார் சிலை, சூழாயுதங்கள் என ஆர்ட் டைரக்டர் ஜி.கே.யின் கைவண்ணம் கச்சிதமாக இருந்தது.
'ஒரு பாடலுக்கெல்லாம் நடனமாட மாட்டேன்' என சமீபத்தில் புதியகொள்கையை அறிவித்த தேஜாஸ்ரீ தன்னை அறிமுகப்படுத்திய இளங்கண்ணனுக்காக தனது கொள்கையை தளர்த்தி குத்து பாட்டுக்கு ஆட்டம் போட்டார்.
ஆட்டம் போட்ட அசதியில் வந்த ரவிகிருஷ்ணா, மூச்சு வாங்கியபடி "காதல், பருத்திவீரன், ஆட்டோகிராஃப் வரிசையில் இந்தப் படமும் டிரென்ட் செட்டரை ஏற்படுத்தும்" என நம்பிக்கை தெரிவித்தார். தனக்கும் இப்படம் திருப்புமுனையை ஏற்படுத்தும் என சொல்லவும் தவறவில்லை.
|