கமல்ஹாசனின் கனவு படைப்புகளில் மர்மயோகியும் ஒன்று. கமலின் ராஜ்கமல் நிறுவனமும் பிரமிட்சாய்மீராவும் இணைந்து தயாரிக்க ஒப்பந்தமானது. படத்திற்கு நூறு கோடி ரூபாய் பட்ஜெட் என திட்டமிடப்பட்டு ஆரம்பிக்கப்பட்டது. பிரமாண்டமான செட் போடப்பட்டு சில காட்சிகளும் எடுக்கப்பட்ட நிலையில் திடீரென படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.
அவ்வளவுதான் 'மர்யோகி' டிராப் என்ற தகவல்கள் கோடம்பாக்கத்தின் ஹாட் நியூஸானது. கமலும் ‘தலைவன் இருக்கின்றானா?' என்ற புதிய படத்தின் கதை விவாதத்தில் பிஸியாகிவிட்டார்.
மர்மயோகியின் உண்மையான நிலவரம் பற்றி பிரமிட்சாய்மீரா தலைவர் சுவாமிநாதனிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-
“ மர்மயோகிக்கு இதுவரை பதினொன்றரை கோடி ரூபாய் முதல் போட்டுள்ளோம். பெரும் பட்ஜெட்டில் உருவாக்கப்படும் படத்திற்கு மக்கள் மத்தியில் சரியான வரவேற்பு கிடைக்குமா? என்ற கேள்வி திடீரென ஏற்பட்டதால் அதுபற்றி கமலுடன் பேச்சுவார்த்தை நடத்திவருகிறோம்.
இப்படியொரு கேள்வி வந்ததற்கு காரணம் தற்போது மார்கெட்டில் ஏற்பட்டுள்ள மாற்றமே. அமெரிக்கா, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய வெளிநாட்டு வியாபாரம் 40 சதவீதம் குறைந்துவிட்டது. அமெரிக்காவில் 12 டாலருக்கு விற்ற டிக்கெட்டுகள் இப்போது நான்கு டாலருக்கு விற்கமுடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. 2009 வருடம்வரை பொழுதுபோக்கு துறையில் வருமானம் குறைந்துவிடும் என்னும் நிலை இருக்கிறது. இதையெல்லாம் யோசித்தே செயல்படவேண்டியுள்ளதால் தற்போதைக்கு மர்மயோகி நிறுத்தப்பட்டுள்ளது. எக்காரணத்தைக் கொண்டும் படத்தை கைவிடும் எண்ணமில்லை” என்றார்.
|