வில் ஸ்மித்தின் ஜோடியானார் ஐஸ்வர்யாராய்
- 19.04.2006
By JBR
ஐஸ்வர்யாராயின் அழகில் மயங்கி அவருக்கு தூது அனுப்பியிருக்கிறார் வில் ஸ்மித். ஹாலிவுட்டின் ஹாட்டஸ்ட் ஹீரோ. 'இன்டிபென்டன்ஸ டே', 'மென் இன் பிளாக்', 'பேட் பாய்ஸ்' படங்களில் வரும் கறுப்பு ஹீரோதான் இந்த வில் ஸ்மித். ஹாலிவுட்டின் முன்னணி நடிகரான இவரை பிலிம்பேர் விருது வழங்கும் விழாவுக்கு சிறப்பு விருந்தினராக அழைத்திருந்தனர். பிப்ரவரி மாதம் நடந்த இந்த விழாவில் கலந்துகொண்ட வில் ஸ்மித்தை ஐஸ்வர்யாவின் நடனம் ரொம்பவே கவர்ந்திருக்கிறது. விழாவில் ஐஸுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார் வில் ஸ்மித்.
|
அமெரிக்கா சென்ற ஸ்மித் தனது மேனேஜர் ஜேம்ஸ் லேஸ்ஸிடர் மூலம் ஐஸ்வர்யாராயை தொடர்பு கொண்டிருக்கிறார். "வில் ஸ்மித் நடிக்கும் 'ஹிட்ச்' படத்தில் நடிக்க சம்மதமா?" - இதுதான் ஐஸ்வர்யாராயிடம் கேட்கப்பட்ட ஒருவரி கேள்வி.
ஹாலிவுட் படத்தில் நடிக்க யாருக்கு கசக்கும்? கதையை கேட்ட ஐஸ் உடனே ஓ.கே. சொல்லியிருக்கிறார். 'ஹிட்ச்' நகைச்சுவை கலந்த படம் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த ஹாலிவுட் உறவை பலப்படுத்த திருமதி ஸ்மித்துக்கு விலை உயர்ந்த புடவை ஒன்றை பரிசளித்திருக்கிறார் ஐஸ். ஜடா பின்கெட்டுக்கு இதில் ஏக சந்தோஷம். (ஜடா பின்கெட் ஸ்மித்தின் மனைவி. அமெரிக்க பெண்ணிற்கும் புடவைதான் வீக்னெஸ்!)
ஐஸ்வர்யாராயின் அழகை வில் ஸ்மித்தும், ஸ்மித்தின் பெருமையை ஐஸும் நண்பர்களிடம் பேசி திரிகிறார்கள். 'ஹிட்ச்' வெளியானால் ஐஸ்வர்யாராய் நிரந்தர ஹாலிவுட் நடிகையாக அதிக வாய்ப்புள்ளது.
இதுவரை இந்திய மென்பொருள் வல்லுநர்களை அமெரிக்காவுக்கு கடத்திக்கொண்டிருந்தார்கள். இப்போது அழகான நடிகைகள்...
இந்தியாவுக்கும் ஏதாவது விட்டு வைங்கப்பா!
|