சோனியா வேடத்தில் ஐஸ்வர்யாராய்?
- 20.05.2006
By JBR
கேன்ஸ் படவிழாவில் கவர்ச்சி உடை அணிந்து ரசிகர்களுக்கு பறக்கும் முத்தத்தை வாரி வழங்கிக்கொண்டிருக்கிறார் ஐஸ்வர்யாராய். 'ஜான்சி ராணி', 'ஜோதா அக்பர்', 'குரு' போன்ற பீரியட் படங்களை தொடர்ந்து மேலுமொரு வரலாற்று படத்தில் இவரை நடிக்க வைக்க முயற்சி நடக்கிறது.
|
வரலாறு என்றதும் அசோகர் காலத்துக்கு தாவ வேண்டாம். இது ரொம்ப பக்கத்தில் உள்ள வரலாறு. அதாவது ராஜீவ்காந்தியும், இத்தாலியை சேர்ந்த சோனியாவும் காதலித்த சொற்ப வருடங்களுக்கு முந்தைய வரலாறு.
இதில் சோனியா வேடத்தில் நடிக்க மூன்று பெயர்கள் பரிசீலனையில் உள்ளன. ஒருவர் பிரபல ஆங்கில நடிகை கார்லாஜூகினா. இன்னொருவர் ப்ரீத்தி ஜிந்தா. மூன்றாவது ஐஸ்வர்யாராய்!
ஐஸ்வர்யாராய்க்கே சோனியாவாகும் அதிர்ஷ்டம் அதிகம் உள்ளது. காரணம், சோனியாவின் காதல் கதையை எடுக்கும் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர்.
ஐஸ்வர்யாராய் நடித்த 'ஜீன்ஸ்', 'ப்ரொவோக்ட்' படங்களை தயாரித்த முரளி மனோகர்தான் இந்தப் படத்தையும் தயாரிக்கிறார். அதுபோல் படத்தை இயக்குகிறவர் ஐஸ் நடித்த 'ப்ரொவோக்ட்' படத்தை இயக்கிய ஜெக்மோகன் முன்ரா.
இவர்கள் இருவருக்கும் ஐஸ்வர்யாவை சோனியா வேடத்தில் நடிக்க வைக்கவேண்டும் என்பதே ஆசை. இந்தப் படத்தின் கதை ரசீன் கிட்வாய் எழுதிய சோனியா காந்தியின் வாழ்க்கை வரலாறை அடிப்படையாகக் கொண்டு தயாராகிறது.
இது முழுக்க காதல் கதைதானே தவிர அரசியல் துளியும் எட்டிப்பார்க்காது என்று உத்தரவாதம் தருகிறார் இயக்குநர் ஜெக்மோகன் முன்ரா!
எட்டிப்பார்த்தால் இந்தப் படத்திற்கும் ஆர்.கே. செல்வமணியின் 'குற்றப்பத்திரிகை' படத்தின் கதிதான்!
|