பவதாரிணி - சபரிராஜா திருமண வரவேற்பு நிகழ்ச்சி (படங்களுடன்)
20.09.2005
By: APS
பவதாரிணி - சபரிராஜா திருமண வரவேற்பு நிகழ்ச்சி நேற்று (19/09/05) மாலை 6 மணிக்கு சென்னை சாந்தோமில் உள்ள மேயர் ராமநாதன் செட்டியார் மண்டபத்தில் நடைபெற்றது.
|
பிரபல சினிமா இசையமைப்பாளர் இளையராஜாவின் மகளும் பின்னணி பாடகியுமான பவதாரணிக்கும் கண்ணன் விளம்பர நிறுவனத்தின் இயக்குனர் சபரிராஜாவுக்கும் கொல்லூர் மூகாம்பிகை அம்மன் கோயிலில் கடந்த 16-ந் தேதி திருமணம் நடந்தது. நேற்று நடந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் அரசியல், சினிமா பிரமுகர்கள் பலரும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள்.
மாலை 6.45 க்கு மணமக்களை இளையராஜாவும் அவருடைய மனைவி ஜீவாவும் மண்டபத்திற்கு அழைத்து வந்தார்கள். மணமகள் பவதாரிணி சிவப்பு நிற ஜார்ஜெட்டில் சில்வர் எம்பிராய்டரி செய்த சேலை அணிந்திருந்தார். மணமகன் சபரிராஜா சந்தன நிறத்தில் கோட்-சூட் அணிந்திருந்தார்.
மணமக்கள் வருவதற்கு முன்பே மண்டபத்திற்கு வந்திருந்த ஏவிஎம் சரவணன், சாருஹாசன் மணமக்கள் வந்ததும் வாழ்த்தினார்கள். சிறிது நேரத்தில் ரஜினிகாந்த் அவர் மனைவி லதாவுடன் வந்தார். பரிசுப்பொருளை மணமக்களுக்கு வழங்கி ரஜினிகாந்தும் லதாவும் வாழ்த்தினார்கள். வாழ்த்திவிட்டு திரும்பும்போது ரஜினிகாந்தை ஆர்வத்துடன் ரசிகர்கள் சூழ்ந்து கொண்டதால் மண்டபத்திலிருந்து வெளியேற அவர் கொஞ்சம் சிரமப்பட வேண்டியிருந்தது.
எம்.ஜி.ஆர். கழகத்தலைவர் ஆர்.எம். வீரப்பன், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன், திராவிடர் கழகத்தலைவர் கி. வீரமணி, புதிய தமிழகம் தலைவர் டாக்டர் கிருஷ்ணமூர்த்தி, தி.மு.க. துணை பொதுச்செயலாளர் மு.க. ஸ்டாலின், தி.மு.க. தலைவர் மு. கருணாநிதியின் மகள் கனிமொழி, பாரதிய ஜனதா கட்சித்தலைவர் கணேசன் ஆகிய அரசியல்வாதிகள் வரவேற்பு நிகழ்ச்சிக்கு வந்து மணக்களை வாழ்த்தினார்கள்.
மற்றும் நடிகர்கள் பிரபு, நெப்போலியன், சத்யராஜ், கார்த்திக், சூர்யா, சிவக்குமார், பார்த்திபன், 'ஜெயம்' ரவி, ராமராஜன், செந்தில், விவேக், ரமேஷ்கண்ணா, உதயா, நாசர், விஜயகுமார், மோகன்பாபு, பாண்டு, வையாபுரி நடிகைகள் மீனா, குஷ்பு, சந்தியா, சொர்ணமால்யா, மனோரமா இயக்குனர்கள் கே. பாலசந்தர், பாலுமகேந்திரா, எஸ்.ஏ. சந்திரசேகரன், எஸ்.பி. முத்துராமன், சேரன், பி. வாசு, சந்தானபாரதி, ஆர்.வி. உதயக்குமார், செல்வராகவன், துரை ஆகியோரும் வந்திருந்தார்கள்.
சரத்குமார் - ராதிகா, விஜயகாந்த் - பிரேமலதா, தனுஷ் - ஐஸ்வர்யா ஆகியோர் தம்பதி சகிதம் விழாவில் கலந்துகொண்டனர்.
முதல் அமைச்சர் ஜெயலலிதா சார்பாக மணமக்களுக்கு பரிசுப்பொருட்கள் வழங்கப்பட்டன.
|