நடிகன், டப்பிங் கலைஞர் என்ற அளவில் இருந்த நிழல்கள் ரவி இப்போது இயக்குனராகவும் மாறியுள்ளார். அவரது மாற்றத்திற்கு காரணமாக இருந்தது ஈழத்தமிழர் பிரச்சனைதான். 'கிளிநொச்சி' என்ற பெயரில் குறும்படம் ஒன்றை இயக்கி உலகத்தமிழர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.
"ரொம்ப நாளாகவே டைரக்ஷன் ஆசை எனக்குள்ள இருந்தது. ஈழத்தில் இப்போது நடந்துகொண்டிருக்கும் செயலுக்கு மனிதாபிமானிகளாக இருக்கும் ஒவ்வொருவரும் ஒரு சொட்டு கண்ணீராவது விட்டுக் கொண்டிருக்கிறார்கள். கலங்கிக் கொண்டிருக்கும் கோடிக்கணக்கானவர்களில் நானும் ஒருவன். என்னை தூங்கவிடாமல் துரத்திக் கொண்டிருக்கும் அப்பாவித் தமிழர்களில் ஓலம்தான் 'கிளிநொச்சி' படத்தை எடுக்கத் தூண்டியது. ஈழத்தமிழர்களின் வலியை உலகத்தின் முன் வைக்கும் முயற்சிதான் இது.
லண்டனில் வசிக்கும் ஒரு தந்தை, கிளிநொச்சியில் இருக்கும் அவரது மகன். மகனை லண்டனுக்கு வரச்சொல்லி அழைக்கிறார் தந்தை. அப்பாவை பார்க்கப்போகும் சந்தோஷத்தில் கிளம்பிக்கொண்டிருப்பவன், ராணுவ தாக்குதலில் பலியாகிறான். மகனை உயிருடன் பார்க்க நினைத்த தந்தை, அவனது சாம்பலையாவது பார்ததுவிட துடிக்கிறார். ஆனால் அதற்கு ஏற்படும் முட்டுக்கட்டைகளும் தந்தையின் தவிப்பும்தான் கதை" ரவி சொல்லி முடித்த மறுநிமிடமே கலங்குகிறது கண்கள்.
படத்தை பார்த்த பாரதிராஜா, நிழல்கள் ரவியை கட்டிபிடித்து உணர்ச்சிவசப்பட்டு பாராட்டினாராம்.
|