எதிரெதிர் துருவத்தில் இருக்கும் சிம்புவையும், தனுஷையும் இணைத்து ஒரு படத்தில் நடிக்க வைக்க முயற்சிகள் நடந்துகொண்டிருக்கும் நிலையில், தனுஷ் படத்தை இயக்கிய வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு ஒரு படத்தில் நடிக்கவுள்ளார்.
குரூப் கம்பெனி சார்பில் கதிரேசன் தயாரித்த படம் 'பொல்லாதவன்'. தனுஷ் - வெற்றிமாறன் காம்பினேஷனில் வெளிவந்த இப்படம் பெரும் வெற்றியைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து பொல்லாதவன் கூட்டணி மீண்டும் ஒரு படத்தில் இணைகிறது.
இன்னும் பெயரிடப்படாத அப்படத்தின் படப்பிடிப்பு ஜூன் மாதம் தொடங்குகிறது. 'படிக்காதவன்' படத்தில் நடித்துவரும் தனுஷின் அடுத்த கால்ஷீட் வெற்றிமாறனுக்குதான்.
இதனைத் தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கவுள்ள படத்தில் நாயகனாக நடிக்க சிம்பு ஒப்பந்தமாகியுள்ளார். இதனையும் குரூப் கம்பெனி சார்பில் கதிரேசனே தயாரிக்கிறார். சிம்புவுக்கு ஜோடியாக அநேகமாக திவ்யாவே நடிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்குமுன் ரம்யா என்ற பெயரில் 'குத்து' படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக திவ்யா நடித்துள்ளது குறி்ப்பிடத்தக்கது.
|