ஸ்ரீஅன்னை அபிராமி என்னும் பெயரில் தொடங்கப்பட்டுள்ள இத்திரையரங்கிற்குள் நுழைந்தால் ஆடம்பரமான சீன அரண்மனையின் தோற்றத்தில் அழகு மிளிர காட்சியளிக்கிறது.
சீன தேவதைகள், சிரித்துக்கொண்டே இருக்கும் லாஃபின் புத்தா, சஞ்சீவி மலையை தூக்கிச்செல்லும் அனுமன்போல கையில் மருந்துடன் பறக்கும் டிராகன் என படம் பார்கக வருபவர்களுக்கு இன்னொரு படம் பார்த்த திருப்தியை ஏற்படுத்துகிறது அரங்கின் வடிவமைப்பு. இத்திரையரங்கின் உரிமையாளர்களான அபிராமி ராமநாதன், நல்லம்மை ராமநாதன் இருவரும் சீனாவிற்கு சுற்றுப்பயணம் செய்து பல ஆய்வுகளை மேற்கொண்டு இதனை வடிவமைக்க செய்தனராம்.
இத்திரையரங்கில் மேலும் ஒரு சிறப்பம்சம் படுத்துக்கொண்டே படம் பார்க்கும் வகையிலான இருக்கை வசதிகள். அமெரிக்க திரையரங்கில் மட்டும் உள்ள இந்த வசதி இந்தியாவிலேயே முதன்முறையாக ஸ்ரீஅன்னை அபிராமி திரையரங்கத்தில் உள்ளது.
இருக்கையின் பக்க வாட்டில் இருக்கும் அழைப்பு மணியை அழுத்தினாலே படம் பார்ப்பவர்களின் தேவைகளை பூர்த்திசெய்வதற்கென சிப்பந்திகள் வருவார்களாம்.
இத்தகைய வசதிகள் கொண்ட இத்திரையரங்கின் தொடக்கவிழா நேற்று நடந்தது. மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன், மாநில அமைச்சர் ஆற்காடு வீராசாமி ஆகியோர் தொடங்கிவைத்தனர். மாநகராட்சி மேயர் மா.சுப்ரமணியம், தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் இராம நாராயணன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு வாழ்த்தினர்.
தொடக்கவிழாவை முன்னிட்டு கந்தசாமி படத்தின் சில காட்சிகள் திரையிடப்பட்டது.
|