மனிஷ் மல்ஹோத்ரா வடிவமைக்கும் ஆடைகளுக்கு சர்வதேச அளவில் மதிப்பு உண்டு. இந்திப் படவுலகைச் சேர்ந்த பல முன்னணி நட்சத்திரங்களின் ஆடை வடிவமைப்பாளராகவும் இவர் உள்ளார்.
'சிவாஜி' படத்தில் ரஜினியின் வித்தியாசமான உடைகளை வடிவமைத்தவர் இவரே. ரஜினியின் இளமை தோற்றத்திற்கு மனிஷின் ஆடை அலங்காரம் ஒரு காரணமாக அமைந்தது.
ரஜினி ஷங்கர் இணையும் இரண்டாவது படமான 'ரோபோ'விலும் மனிஷ் மல்ஹோத்ரா ரஜினியின் உடைகளை வடிவமைக்கிறார். 'ரோபோ'வில் முற்றிலும் வித்தியாசமான தோற்றத்தில் நடிக்கிறார் ரஜினி. இதற்காக ஆடைகளும் புதிய பாணியில் உருவாக்கப்பட்டுள்ளன.
மும்பையிலும் பிறகு சென்னை ஏ.எம்.மிலும் நடந்த போட்டோசெஷனில் மல்ஹோத்ரா வடிவமைத்த இந்த வித்தியாசமான உடைகளை அணிந்து கொண்டார் ரஜினி. நேற்று நுங்கம்பாக்கத்தில் உள்ள ஸ்டுடியோவில் நடந்த போட்டோசெஷனிலும் மல்ஹோத்ரா வடிவமைத்த ஆடைகளே பயன்படுத்தப்பட்டன. இந்த போட்டோசெஷனில் ரஜினி ஷங்கருடன் மனிஷ் மல்ஹோத்ராவும் கலந்து கொண்டார்.
உடைகளைப் போலவே பலவித வித்தியாசமான விக்குகளும் இந்த போட்டோசெஷனில் பயன்படுத்தப்பட்டன. சிகை அலங்காரத்தை கவனித்துக் கொண்டவர் ஒப்பனைக் கலைஞர் பானு. சிவாஜியிலும் இவரே சிகையலங்காரத்தை கவனித்துக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
'ரோபோ'வில் ரஜினியின் தோற்றம் இன்னும் இறுதி செய்யப்படவில்லை. மூன்று போட்டோசெஷன் புகைப்படங்களையும் பார்த்து, அதில் சிறந்தது தேர்வு செய்யப்படும். தேவைப்பட்டால் மேலும் போட்டோசெஷன் நடத்தப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
|