ரிஷிக்குமார். சஞ்சய்ராம் இயக்கும் 'இயக்கம்' படத்தில் நாயகனாக அறிமுகமாகிறார். முதல்படமே வெளியாகவில்லை அதற்குள் நான்கைந்து படங்களின் ஹீரோ வாய்ப்பு இவரை தேடி வந்துள்ளது.
"சினிமா பீல்டுக்கு கடுகளவும் சம்பந்தமில்லாத குடும்பத்தை சேர்ந்தவன்தான் நான். சென்னை பல்கலைகழகத்தில் BBA படித்துள்ளேன். தமிழ்நாடு கிரிக்கெட் அணியில் விளையாடிக்கொண்டிருந்த எனக்குள் நடிகன் ஆசையை உசுப்பேற்றி வைத்தது நண்பர்கள்தான்.
கொஞ்சம் கொஞ்சம் கிரிக்கெட் கிரவுண்டை மறந்து சினிமா சம்பந்தப்பட்ட விஷயங்களை கற்றுக்கொள்ள ஆரம்பித்தேன். கூத்துப்பட்டறையில் நடிப்பு பயிற்சி, திறமையான மாஸ்டர்களிடம், நடனம், சண்டைன்னு அடிப்படை திறமைகளை வளர்த்துக்கொண்டேன்.
முதன்முதலா கேமராவுக்கு முன்னாடி நடிச்சது விளம்பர படத்துலதான். போலார் பேன், கோஆப் டெக்ஸ். கொடாக் கேமரா போன்ற பிரபல கம்பெனிகளின் விளம்பர படங்களில் நடித்துள்ளேன்.
'காக்க காக்க' படத்துல டேனியல் பாலாஜி நடித்த கேரக்டரில் நடிக்க முதலில் எனக்குதான் வாய்ப்பு வந்தது. நடித்தால் கதாநாயகனாகத்தான் நடிக்கனும்னு வறட்டு பிடிவாதம் இருந்ததால் அந்த வாய்ப்பை மறுத்தேன். கொஞ்ச நாள் கழித்து எனக்குள் இருந்த பிடிவாத வேதாளத்தை இறக்கி வைத்துவிட்டு வாய்ப்புகளுக்காக வலைவீசினேன்" என்னும் ரிஷ்குமாரின் பேச்சை கேட்டால் ருசிக்குமார் என்று அழைக்கத்தோன்றுகிறது.
சரி இயக்கம் பட வாய்ப்பு எப்படி வந்தது?
"சஞ்சய்ராம் படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ள லியோ எனது நண்பர். அவர் மூலமாக சஞ்சய்ராமை சந்தித்தேன். அவர் வைத்திருந்த கதைக்கு நான் பொருத்தமாக இருந்ததால் என்னை தேர்வு செய்தார். படத்தில் இருவிதமான கொட்டப்புக்களில் நடித்திருக்கிறேன். நல்லபடியா வந்திருக்கு படம்.
அடுத்து தமிழில் வெளிவந்து வெற்றி பெற்றுள்ள ஒரு படத்தின் கன்னட ரீமேக்கிலும், புதுமுக இயக்குனர் மன்னவன் இயக்கும் ஒரு தமிழ் படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளேன்.
கதாநாயகன் என்ற பழைய பார்முலா இல்லாமல் கதையின் நாயகனாக நடிப்பதுதான் என்னுடைய ஆசை. என்னை மிகவும் கவர்ந்தவர் விக்ரம்தான். அவரை போல வெரைட்டியான ரோல்களில் நடிக்க வேண்டும் என்பதுதான் எனது லட்சியம்" என மூச்சுவிடாமல் சொல்லி முடிக்கிறார் ரிஷிகுமார்.
|