ரவுடியை நாயகனாக காண்பிக்கும் போக்கு தமிழ் சினிமாவில் சிலகாலம் முன்பு உச்சத்தில் இருந்தது. கட்டுமஸ்தான உடம்பு, கலரிங் முடி, கறுப்பு கயிறு என மிரட்டல் தோற்றத்தில் தெருச்சண்டித்தனம் செய்பவர்களையெல்லாம், ஹீரோவாக காட்டினார்கள் இயக்குனர்கள். இந்த பார்முலாவில் வெளிவந்த பெரும்பாலான படங்கள் தோல்வியே தழுவின.
இந்தியாவை கலக்கிக் கொண்டிருக்கும் BPO கலாச்சாரத்தை இப்போது கையிலெடுத்திருக்கிறார்கள் இளம் இயக்குனர்கள். செல்வராகவனின் கதை திரைக்கதையில் உருவான 'யாரடி நீ மோகினி' சாப்ட்வேர் கம்பெனி பின்புலத்தில் எடுக்கப்பட்டது. ஸ்ரேயா நடிக்கும் ஆங்கிலப் படமும் கால்சென்டரை மையப்படுத்தியதே.
த்ரிஷா நடிக்கும் கவுதம் வாசுதேவ மேனனின் 'சென்னையில் ஒரு மழைக்காலம்' கால் சென்டர் கலாச்சாரத்தை பின்னணியாகக் கொண்டே உருவாகிறது.
பிரியங்கா, வம்சி கிருஷ்ணா நடிப்பில் 'சென்னை பட்டணம்' என்ற படம் தயாராகிறது. இதுவும் கால்சென்டரை மையப்படுத்திய கதைதான்.
கால்சென்டர்களில் நடக்கும் கலாச்சார மீறல்களே பெரும்பாலான இயக்குனர்களை அதை நோக்கி இழுக்கிறது. அதே நேரம் ஹார்ட்வேர் கதை சொல்லிகளான ஹரி, பேரரசு போன்றவர்கள் இன்னமும் அரிவாளையே நம்புகிறார்கள்.
என்ன இருந்தாலும் அரிவாளில்தானே நம்முடைய 'வீர' கலாச்சாரம் ஒட்டிக் கொண்டிருக்கிறது.
|