'கானல் நீர்' படம் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் ஜே.கே.ரித்திஷ். படம் வெற்றிபெற்றதோ இல்லையோ கோடம்பாக்கத்தில் இவரது முகம் தெரியாதவர்கள் எவரும் இருக்கமுடியாது. அந்த அளவுக்கு கடஅவுட்களிலும் போஸ்டர்களிலும் இவரது முகம் பரிட்சயம்.
தமிழக அமைச்சர் சுப.தங்கவேலுவுக்கு இவர் பேரன் உறவு என்பதுடன் இராமநாதபுர மக்கள் தங்கள் மனசுக்குள் ரித்திஷூக்கு கோயில் கட்டி கும்பிடுகின்றனராம். எட்டாம் வள்ளலுக்கு பிறகு எண்ணிக்கை உயர்த்தும் அளவிற்கு வள்ளலாகவும் வர்ணிக்கப்பட்டு வருகிறார்.
ரித்திஷ் இரண்டாவதாக நடித்துள்ள படம் 'நாயகன்'. இதில் இவருக்கு ஜோடியாக நடிப்பவர் அனிதா. இன்னொரு நாயகனாக ரமணாவும் அவருக்கு ஜோடியாக கீர்த்தி சாவ்லாவும் நடித்துள்ள இப்படத்தை சரவண ஷக்தி இயக்கியுள்ளார். மரியா மனோகர் இசையமைப்பில் முத்துவிஜயன், யோகி, க.செழியன், கார்த்தி்க் நேத்தா ஆகியோர் பாடல்களை எழுதியுள்ளனர்.
படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் இன்று நடந்தது. முதல்வர் கருணாநிதியின் துணைவியார் ராஜாத்தி அம்மாள் பாடல்களையும், ட்ரெயிலர்களையும் வெளியிட, குடிசை மாற்றுவாரியத் துறை அமைச்சர் சுப.தங்கவேலன் பெற்று்கொண்டார். பாடல் சி.டி.யை செய்தி துறை அமைச்சர் பரிதி இளம் வழுதி பெற்றுக்கொண்டார். படத்தின் ட்ரெயிலரை வருவாய்த்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி வெளியிட்டார்.
விழாவில் பிலிம் சேம்பர் தலைவர் கேயார்ஜி, தயாரிப்பாளர்கள் சங்கத்தலைவர் இராம நாராயணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு வாழ்த்தினர்.
விழா முடிவில் பத்திரிகையாளர்களை சந்தித்த தயாரிப்பாளர் ஜெயகுமார் ரெட்டி, "இரண்டு கோடி ரூபாய் படஜெட்டில் ஆரம்பிக்கப்பட்ட இப்படம் இப்போது எட்டு கோடி ரூபாய் பட்ஜெட்டை தொட்டுள்ளது. அதற்கு காரணம் படத்தின் நாயகன்தான். இராமநாதபுர மக்களிடம் அவருக்குள்ள செல்வாக்கையும், மரியாதையையும் பார்த்தபிறகு படத்தை பிரமாண்டமாக எடுக்க முடிவு செய்தோம். ரித்திஷ் - அனிதா ஆடிப்படும் பாடல் காட்சிக்காக மட்டும் ஒரு கோடி ரூபாய் செலவழிக்கப்பட்டுள்ளது" என்றார்.
இயக்குனர் சரவண ஷக்தி போசியபோது "அடுத்த மூன்று ஆண்டுகளில் ரித்திஷ் தமிழ்நாட்டின் இன்னொரு சூப்பர் ஸ்டாராக மாறிவிடுவார் என பாராட்ட" ரித்திஷ் முகத்தில் பெருமிதத்தின் எல்லை.
|