தனது 'பொக்கிஷம்' படத்திற்கு ப்ரியாமணி கால்ஷீட் கொடுக்க மறுத்ததால், ப்ரியாமணியை கடுமையாக சாடியிருக்கிறார் சேரன். ப்ரியாமணியும இதற்கு பதிலடி கொடுக்க தயங்கவில்லை. சேரனை பிடிபிடியென பிடித்திருக்கிறார்.
சேரன்மீது ப்ரியாமணி காட்டிய பாய்ச்சல் இதுதான்....
"ப்ரியாமணி பற்றி யார் வேண்டுமானாலும், என்ன வேண்டுமானாலும் சொல்லலாம். தட்டிக்கேட்பதற்கு ஆள் இல்லை என்று சிலர் நினைக்கிறார்கள். டைரக்டர் சேரன் என்னுடன் பேசவே இல்லை. அவருடைய அலுவலகத்தில் இருந்து ஒருவர் பேசினார்.
அவரிடம் நான் ஏற்கனவே ஒப்புக் கொண்ட மூன்று படங்கள் கையில் இருக்கிறது. இந்த படங்களை 'அட்ஜஸ்' செய்து எப்படி தேதி கொடுப்பது என்று தெரியவில்லை, இரண்டு நாட்கள் டைம் கொடுங்கள் என்று கேட்டேன்.
2 நாட்கள் கழித்து, ஏற்கனவே பேசியவரே என்னிடம் மீண்டும் பேசினார். ஸாரி என்னால் தேதி கொடுக்க முடியவில்லை என்று சொன்னேன். அதில் என்ன தவறு இருக்கிறது?
இதற்காக, தேசிய விருது பெறுவதற்கு ப்ரியாமணிக்கு தகுதி இல்லை என்று சேரன் சொல்லலாமா? அவருடைய பார்வையில், எனக்கு அந்த தகுதி இல்லாமல் போய் இருக்கலாம். அவருடன் நடிக்கும் நடிகைக்கு மட்டுமே அந்த தகுதி இருக்கிறது என்று சேரன் நினைக்கிறார் போலும்.
எப்போதுமே சிலர் பாராட்டப்படும்போது, அவருடைய வளர்ச்சி பிடிக்காத சிலர், பொறாமையில் திட்டத்தான் செய்வார்கள். அதை இந்தக் காதில் வாங்கி அந்த காதில் விட்டுவிட வேண்டியதுதான்.
நான் இப்போது, 'துரோணா' என்ற தெலுங்கு படத்தில் நடித்து வருகிறேன். ஏற்கனவே நடித்து வந்த 'திரக்கதா' என்ற மலையாளப் படம் முடிவடையும் நிலையில் இருக்கிறது. தொடர்ந்து அந்த படத்துக்கு கால்ஷீட் கொடுத்து முடித்துக் கொடுக்க வேண்டும்.
இதையடுத்து மணிரத்னம் இயக்கும் புதிய படத்தில் நடிக்க சம்மதித்து இருக்கிறேன். மணிரத்னம் எப்போது வேண்டுமானாலும் அழைப்பார். அவர் அழைக்கும்போதெல்லாம் போய் நடிக்க வேண்டும். அதனால்தான் வேறு படங்களை ஒப்புக்கொள்ளவில்லை" மூச்சு விடாமல் பேசி முடித்தார் ப்ரியாமணி.
|