பெரிய பேனர், பெரிய இயக்குனர், நல்ல நடிகையுடன் ஜோடி என ஷாமுக்கு எல்லாமும் நன்றாக அமைந்தாலும் பெயர் சொல்லும் இடத்திற்கு நகர முடியாமல் தத்தளிக்கிறார்.
ஷரவண சுப்பையாவின் இயக்கத்தில் நடித்திருக்கும் 'ஏபிசிடி'யை எதிர்பார்த்து காத்திருக்கும் ஷாம் அடுத்ததாக நடிக்கும் படம் 'மனதோடு மழைக்காலம்'.
பெயரை கேட்டாலே மனதுக்குள் கவிதை சாரல் அடிக்கும் இப்படத்தை இ.எல்.கே. புரொடக்ஷ்ன் என்னும் நிறுவனம் சார்பில் ஆண்டனி வழங்க சக்திவேல் தயாரிக்கிறார். 'அற்புதம்' படத்தை இயக்கியுள்ள அற்புதன் இயக்குகிறார்.
ஷாமுக்கு ஜோடியாக இன்னொரு மலையாள மாடப்புறா தமிழுக்கு அறிமுகமாகிறார். பெயர் நித்யாதாஸ்.
படத்தின் தொடக்கவிழா பிரசாத் ஸ்டுடியோவில் இன்று (24/10/2005) நடந்தது. மகன்கள் இசையமைக்கும் பட விழாக்களில் கலந்துகொள்ளாத இளையராஜா இப்படத்தின் பூஜையை குத்துவிளக்கேற்றி தொடங்கிவைத்து ஆச்சர்யமூட்டியதோடு படத்தில் இசையமைக்கும் கார்த்திக் ராஜாவுக்கு வாழ்த்துக் கூறினார்.
விழாவில் தயாரிப்பாளர்கள் சத்யஜோதி தியாகராஜன், ஏ.எல். அழகப்பன், ஆர்.பி. சௌத்ரி இயக்குனர்கள் பாலு மகேந்திரா, எஸ்.பி. முத்துராமன், கே.எஸ். ரவிக்குமார் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்த, நாயகனும் நாயகியும் பெரியவர்களின் காலில் விழுந்து ஆசீர்வாதத்தை பெற்றுக்கொண்டனர்.
விழாவிற்கு வந்தவர்களை தயாரிப்பாளர் சக்திவேல், இயக்குனர் அற்புதன் ஆகியோர் மாலை அணிவித்து வரவேற்றனர்.
|