---Artistgallery2---
ஸ்ரீபெரும்புதூரில் புராதன சிறப்புடைய புகழ் பெற்ற ஆதிகேசவப் பெருமாள் கோவில் உள்ளது.சுமார் ஆயிரம் வருடத்துக்கு முந்தைய இந்தக் கோவிலில் தற்போது திருப்பணி வேலைகள் நடைபெற்று வருகின்றன. ஆதிகேசவப் பெருமாள் கோவில் கோபுர விமானங்களுக்கு ரூ.6 கோடி செலவில் தங்க கவசம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இதனால் இரவு 9 மணிமுதல் அதிகாலை 5 மணிவரை பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை.
இந்நிலையில் வடிவேலு நடிக்கும் 'இந்திரலோகத்தில் நா. அழகப்பன்' படப்பிடிப்பு இந்த கோவிலில் நடைபெற ஏற்பாடாகி இருந்தது. அதற்காக அதிகாலையில் இருந்து படப்பிடிப்பு குழுவினர் 500-க்கும் மேற்பட்டோர் இந்தக் கோவிலில் குவியத் தொடங்கினார்கள். நடிகர்-நடிகைகள், டைரக்டர், ஒளிப்பதிவாளர் உள்ளிட்ட ஒட்டு மொத்த குழுவினரும் வந்தனர்.
கோவிலின் உள்ளே யாககுண்டம், யாகசாலை போல 'செட்'கள் போடப்பட்டன. சாமி கும்பிடச் சென்ற பக்தர்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இதனால் பக்தர்கள் சாமி கும்பிட முடியாமல் மிகவும் அதிருப்திக்கு ஆளானார்கள்.
மேலும் படப்பிடிப்பு குழுவினர் தாங்கள் சாப்பிட்ட எச்சில் இலைகள், காபி குடித்த பிளாஸ்டிக் டம்ளர்கள் மற்றும் குப்பைகள் கோவிலுக்குள்ளேயே போடப்பட்டு ஆங்காங்கே சிதறிக் கிடந்தன. இதுவும் பக்தர்களை மிகவும் வேதனைக்குள்ளாக்கியது.
இதனால் ஆத்திரம் அடைந்த பொது மக்களில் சிலர், பேரூராட்சி தலைவரிடம் சென்று படப்பிடிப்பு நடத்த எப்படி அனுமதி அளிக்கலாம் என்று கேட்டனர். அதற்கு அவர் படப்பிடிப்புக்கு நாங்கள் அனுமதி அளிக்கவில்லை, எங்களிடம் யாரும் அனுமதி கேட்கவும் இல்லை என்று கூறினார்.
இதைத் தொடர்ந்து நகர காங்கிரஸ் தலைவர், தி.மு.க. நகர செயலாளர், பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் பலர் கோவிலுக்குச் சென்று படப்பிடிப்பை நிறுத்தும்படி கூறினார்கள். ஆனால் படப்பிடிப்பு குழுவினர் தாங்கள் இந்து சமய அறநிலையத்துறை சிறப்பு ஆணையரிடம் முறையாக அனுமதி வாங்கி படப்பிடிப்பை நடத்துவதாகவும், ஆகவே படப்பிடிப்பை நிறுத்த முடியாது என்றும் கூறினார்கள்.
இதனால் படப்பிடிப்பு குழுவினருக்கும், பொது மக்களுக்கும் இடையே கடும் வாக்கு வாதம் ஏற்பட்டது. கோவில் வளாகத்தில் பரபரப்பும், பதட்டமும் நிலவியது. நிலைமை சரியில்லை என்பதை தெரிந்து கொண்ட படப்பிடிப்பு குழுவினர் உடனடியாக படப்பிடிப்பை ரத்து செய்து விட்டுவெளியேறினார்கள்.
|