---Artistgallery2---
வெங்கடேஷ், லிங்குசாமி ஆகியோரிடம் இணை இயக்குனராக இருந்த கனகு இயக்குனராக அறிமுகமாகும் படம் 'பிடிச்சிருக்கு' 'முருகா' அசோக் நடிக்கும் இப்படத்திற்கு மது ரமேஷன் என்ற இளைஞர் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார்.
படத்தின் பாடல் வெளியீட்டுவிழா சென்னையில் நடந்தது. எம். எஸ். விஸ்வநாதன், பி.சுசிலா, எஸ்.ஜானகி, எஸ்.பி. பாலசுப்ரமணியம் உள்ளி்ட்ட மூத்த இசைகலைஞர்கள் கலந்துகொண்டனர்.
ஒவ்வொரு பாடல்களையும் தனி தனியாக அறிமுகப்படுத்தி வெளியிட்டது விழாவின் சிறப்பம்சமாக இருந்தது. இசையமைப்பாளர் மது ரமேஷன் தந்தையான ரமேஷன் நாயரும் ஒரு பாடலை எழுதியுள்ளாராம்.
'ரன்' படத்தின் கதையை ஏ.எம். ரத்னத்திடம் சொன்னபோது 'பிடிச்சிருக்கா' என்ற தலைப்பைதான் முதலில் சொன்னேன். ஆனால் அவர் பிடிக்கவில்லை என்று சொன்னதால் 'ரன்' என்று மாற்றினேன். அந்த தலைப்பை இப்போது கனகு இந்த படத்திற்கு வைத்திருப்பது எனக்கு ரொம்பவும் பிடிச்சிருக்கு" என்று தனது சிஷ்யரை வாழ்த்தினார் லிங்குசாமி.
கதாநாயகன் அசோக் பேசியபோது "எனது முதல் படத்தின் பெயர் 'முருகா' இரண்டாவது படமான இதில் என் கேரக்டர் பெயர் வேல். ஆக எல்லாம் கடவுள் அருளால் நடந்து வருகிறது என்று நினைக்கிறேன். அதனால்தான் சுசிலா அம்மா, எஸ்.பி.பி. சார் போன்ற பெரியவர்கள் என்னை வாழ்த்தும் பாக்கியம் கிடைத்திருக்கிறது" என்றவர் சுசிலா எஸ்.பி.பி.யின் கால்களில் சாஸ்டாங்கமாக விழுந்து ஆசிர் வாங்கினார்.
"'அண்ணாமலை' படம் எடுத்தபோது பாலச்சந்தரின் அலுவலகத்தில் தனியாக உட்கார்ந்து ஒரு குட்டி பையன் கீ போர்டு வாசித்துக்கொண்டிருப்பான். அவனுடைய இசையில் ஏதோ ஒரு இனம் புரியாத ஈர்ப்பு இருக்கும். இப்போது உலகப் புகழ்பெற்று இருக்கும் ஏ.ஆர்.ரஹ்மான்தான் அந்த பையன். அவருக்கு பிறகு மது ரமேஷனின் இசையில் ஒரு தனித்துவத்தைப் பார்க்கிறேன். இவரும் பெரிய அளவில் வளருவார் என்று நினைக்கிறேன்" என்று நம்பிக்கை தெரிவித்தார் இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா.
இதே கருத்தை வலியுறுத்தி வாழ்த்தி பேசிய எஸ்.பி.பி ஒரு கட்டத்தில் கோபம் கொப்பளித்தவராக புதிய தலைமுறை இசையமைப்பாளர்களை கடிந்து கொண்டார்.
"அந்தக் காலத்திலெல்லாம் ரெக்கார்டிங் நடந்தால் கல்யாண வீடுபோல ரெக்கார்டிங் தியேட்டரே கலகலப்பாக இருக்கும். ஆனால், இப்போது அதுமாதிரியெல்லாம் நடப்பதில்லை. பல இசையமைப்பாளர்கள் விஷயம் தெரியாமல் அரைவேக்காட்டுத்தனமாக இருக்கிறார்கள். ஒரு ராகத்திற்கு நோட்ஸ கேட்டால் கூட தெரிவதில்லை" என வருத்தத்தை வெளிப்படுத்தினார்.
முடிவில் இயக்குனர் கனகு நன்றியுரையாற்றினார். சிறப்பு விருந்தினர்களுக்கு தயாரிப்பாளர் நினைவு பரிசு வழங்கினார்.
|