விக்ரம், த்ரிஷா நடிப்பில் லிங்குசாமி இயக்கியுள்ள படம் 'பீமா'. ஏ.எம். ரத்னம் தயாரித்துள்ளார். இப்படம் தெலுங்கில் டப்பிங் செய்யப்பட்டுள்ளது. ஆந்திராவில் நாளை மறுநாள் திரைக்கு வர இருந்தது. இதற்கிடையே பைனான்சியரான எஸ்.பி.என்.கிருஷ்ணமூர்த்தி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
"'பீமா' படத் தயாரிப்புக்காக ரூ.75 லட்சம் தேவை என்று தயாரிப்பாளர் ரத்னம் கேட்டார். தெலுங்கு 'பீமா'வை ஆந்திராவில் வெளியிடும் உரிமை எனக்கு தர வேண்டும் என்ற நிபந்தனையுடன் ரூ.75 லட்சம் அளித்தேன். இப்போது படத்தை தெலுங்கில் திரையிடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
ஆந்திர உரிமையை கேட்டால், அதை தர மறுப்பதுடன் ரூ.75 லட்சத்தையும் திருப்பி தரவில்லை. எனவே படத்தை தெலுங்கில் வெளியிட தடை விதிக்க வேண்டும்". இவ்வாறு குறிப்பிடடுள்ளார். மனுவை நேற்று விசாரித்த நீதிபதி ராஜேஸ்வரன், 'பீமா' வை தெலுங்கில் வெளியிட மூன்று வாரத்துக்கு இடைக்காலத் தடை விதித்தார். ஏ.எம்.ரத்னம் பதில் மனு தாக்கல் செய்ய நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவிட்டார்.
'பீமா' படம், முதல் வாரத்தில் ரூ.19 கோடி வசூலித்துள்ளது. இது ரஜினியின் 'சிவாஜி' படத்துக்கு இணையான வசூல் என வினியோகஸ்தர்கள் தெரிவித்தனர். திருவாரூரில் முதல் வாரத்தில் 'வேல்', இரண்டரை கோடி ரூபாயும் 'பில்லா' மூன்றரை கோடி ரூபாயும் வசூலித்தது. இச்சாதனையையும் முறியடித்து 'பீமா' ரூ.5 கோடியை வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.
|