சுரேஷ் கிருஷ்ணா இயக்கிய 'சங்கமம்' படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் விந்தியா. தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்பட 35 படங்களுக்குமேல் கதாநாயகியாக நடித்துள்ளார். இவர் தற்போது 'அழகு நிலையம்', 'ஆயுதம் செய்வோம்' ஆகிய படங்களில் கதாநாயகியாக நடித்து வருகிறார். அப்படங்கள் விரைவில் வெளியாக உள்ளது.
இந்நிலையில் இல்லற வாழ்க்கையில் அடியெடுத்து வைக்கவுள்ளார் விந்தியா. இவருக்கும் நடிகை பானுஃப்ரியாவின் தம்பி கோபி என்கிற கோபி கிருஷ்ணாவுக்கும் திருமணம் நிச்சயக்கப்பட்டுள்ளது. 'வாக்குமூலம்' என்ற படத்தில் கோபி கதாநாயகனாக நடித்தவர். ஆட்டோ மொபைல் இன்ஜினியரான கோபி ரியல் எஸ்டேட் தொழிலும் நடத்தி வருகிறார்.
விந்தியா - கோபி இருவரும் சமீபகாலமாக நெருங்கிய நண்பர்களாக பழகி வந்தனர். இதற்கிடையே இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு எடுத்தனர்.
இருவீட்டாரின் சம்மதத்தின் பேரில் நிச்சயம் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து அடுத்த மாதம் 16-ம் தேதி குருவாயூர் கிருஷ்ணன் கோவிலில் திருமணம் நடைபெற உள்ளது. இத்திருமண விழாவில் இருவீட்டாரின் நெருங்கிய உறவினர்களும், நண்பர்களும் கலந்து கொள்கின்றனர். அதன்பிறகு, சென்னையில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதில் திரையுலக நட்சத்திரங்களும், அரசியல் பிரமுகர்களும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்த உள்ளனர்.
விந்தியாவின் தந்தை யோகானந்த், கோபியின் சகோதரி பானு ப்ரியா, சாந்தி ப்ரியா கோபியின் தாயார் M.லட்சுமி ஆகியோர் திருமண ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.
|