தமிழ் சினிமா தொடங்கி 75 ஆண்டுகள் ஆனதையொட்டி அதன் பவள விழாவை கொண்டாட தென்னிந்திய நடிகர் சங்கம் முடிவு செய்து இருக்கிறது. இந்த விழா சிங்கப்பூரில், ஆகஸ்டு 11-ந் தேதி நடைபெற இருக்கிறது.
இதற்கான ஏற்பாடுகளை நடிகர் சங்க தலைவர் சரத்குமார், பொதுசெயலாளர் ராதாரவி, துணைத்தலைவர் விஜயகுமார் மற்றும் நிர்வாகிகள் செய்து வருகிறார்கள்.
விழாவில் கலந்துகொள்ளும்படி தென்னிந்திய நடிகர் சங்கத்தில் உறுப்பினர்களாக இருக்கும் முன்னணி நடிகர்-நடிகைகள் அனைவருக்கும் அழைப்பிதழ் அனுப்பப்பட்டு இருக்கிறது. இது தொடர்பாக சில முக்கிய நடிகர்-நடிகைகள் நடிகர் சங்க நிர்வாகிகள் நேரில் சந்தித்து, விழாவில் கலந்துகொள்ளும்படி கேட்டுக்கொண்டார்கள்.
60 சதவீத நடிகர்-நடிகைகள், கலை விழாவில் கலந்து கொள்வதாக சம்மதம் தெரிவித்து இருக்கிறார்கள். ஒரு சில நடிகர்-நடிகைகள் பல்வேறு காரணங்களை சொல்லி, விழாவில் கலந்துகொள்வதை தவிர்க்க முயற்சிப்பதாக தெரிகிறது.
அந்த நடிகர்-நடிகைகளுக்கு தடை விதிப்பது என்று தென்னிந்திய நடிகர் சங்கம் முடிவு செய்து இருக்கிறது. இது தொடர்பாக நடிகர் சங்க நிர்வாகிகள், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம், தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சங்கம் (பெப்சி) ஆகியோருடன் ஆலோசனை நடத்தி வருகிறார்கள்.
|