---Artistgallery2---
'மின்னலே' 'காக்க காக்க' 'மன்மதன்' உள்ளிட்ட படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ளவர் ஆர்.டி. ராஜசேகர். தற்போது 'பீமா', 'காளை' உள்ளிட்ட படங்களுக்கு ஒளிப்பதிவு செய்யும் இவர் ஸ்ரீபிரியாவின் தம்பி சந்திர காந்த் தயாரிக்கும் 'சிங்க குட்டி' படத்திற்கு ஒளிப்பதிவாளராக ஒப்பந்தமானார்.
இந்நிலையில் அவர் மீது தயாரிப்பாளர்கள் சங்கத்தில் சந்திர காந்த் கொடுத்துள்ள புகார் வருமாறு:-
'சிங்க குட்டி' படத்தை கடந்த மே மாதம் 9-ம் தேதி தொடங்கினோம். படத்தை செப்டம்பர் மாதம் திரைக்கு கொண்டுவர திட்டமிட்டு இருந்தோம்.
ஆர்.டி.ராஜசேகர் ஒப்புக்கொண்டபடி படப்பிடிப்புக்கு வராததால், எங்கள் படம் இன்னும் முடிவடையவில்லை. நாங்கள் அவரை ஒளிப்பதிவாளராக ஒப்பந்தம் செய்தபோது, அவர் கைவசம் 'பீமா' படம் மட்டுமே இருந்தது. நாங்கள் ஒப்பந்தம் செய்தபின், 'காளை', 'சத்யம்', உள்பட பல படங்களுக்கு ஒளிப்பதிவு செய்யும் வாய்ப்பு அவருக்கு வந்தது.
ஆர்.டி. ராஜசேகர் எங்களுக்கு கொடுத்த தேதிகளை, வேறு பெரிய படங்களுக்கு கொடுக்க ஆரம்பித்தார். எங்கள் படப்பிடிப்பு தேதிகளை தள்ளிக்கொண்டே போனார். இதுபற்றி அவரிடம் கேட்டபோது, டிசம்பர் மாதம் 'சிங்க குட்டி' படப்பிடிப்புக்கு வந்துவிடுவதாக கூறினார். ஆனால் அவர் சொன்னபடி வரவே இல்லை.
சில நாட்களுக்குமுன்பு அவரை அணுகியபோது, பிப்ரவரி மாதம் வருவதாக கூறினார். இப்போது, மார்ச் மாதம்தான் வர முடியும் என்று கூறுகிறார்.
அவர் படப்பிடிப்பை தள்ளிப் போட்டுக்கொண்டே போனதால், எங்களுக்கு பல லட்சம் ரூபாய் இழப்பு ஏற்பட்டு விட்டது.
அவருக்கு ஒரு பெரிய தொகையை சம்பளமாக கொடுத்து இருக்கிறோம். அதனால் எங்கள் படப்பிடிப்புக்கு, அவருடைய முழு ஒத்துழைப்பு கிடைக்கும்படி செய்ய வேண்டும். அப்படி அவருடைய ஒத்துழைப்பு கிடைக்காவிட்டால், நாங்கள் கொடுத்த பணம் திரும்ப கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும். வேறு ஒரு ஒளிப்பதிவாளரை நாங்கள் பயன்படுத்திக்கொள்வதற்கும் அனுமதிக்க வேண்டும்.
|