சந்தைக்கு வரும் 'சந்திரமுகி' பின்னணி இசை
27.09.2005
By: Amalan
வசூலில் சக்கைப்போடு போட்ட 'சந்திரமுகி'யின் பின்னணி இசையும் இப்போது சந்தைக்கு வருகிறது. ஒரு படத்தின் பின்னணி இசை ஆல்பமாக வெளிவருவது இந்தியாவில் இதுதான் முதல்முறையாம்.
|
மனசும் சூட்கேஸும் நிறைந்த சந்தோஷத்தில் சிவாஜி புரொடக்ஷ்ன் ராம்குமார் இப்படி ஒரு வித்தியாச முயற்சியை எடுத்துள்ளார்.
வரும் அக்டோபர் 1-ம் தேதி சிவாஜி பிறந்த நாள் விழாவில் சந்திரமுகி வெற்றிவிழா நடைபெறவுள்ள நிலையில் படத்தின் பின்னணி இசை வெளியீட்டு நிகழ்ச்சி சென்னை தி. நகரில் உள்ள G.R.T. ஹோட்டலில் இன்று (27/09/05) நடந்தது.
தயாரிப்பாளர்கள் ராம்குமார் - பிரபு, இயக்குனர் பி. வாசு, இசையமைப்பாளர் வித்யாசாகர் ஆகிய நால்வரும் இணைந்து சி.டி.யை வெளியிட்டனர்.
பின்னர் மைக்கை பிடித்த இயக்குனர் வாசு...
"படம் தொடங்குவதற்கு முன்பாகவே ரஜினி சார் என்னிடம் இசை பற்றி கேட்டபோது நான் முன்மொழிந்த பெயர் வித்யாசாகர்தான். ஒரு படத்திற்கு கதையும் வசனமும் உடல்மாதிரி. இசை உடை மாதிரி. உடலுக்கு உடை எப்படி முக்கியமோ, அதுபோல் ஒரு படத்திற்கு முழுமை தருவது இசைதான்" என சூப்பர்ஸ்டாரின் தத்துவம் போலவே உதாரணங்களை அடுக்கியபோது வித்யாசாகரின் உள்ளுக்குள் உறங்கிய சந்தோஷமும் புன்னகை வழியே உடைந்தது.
"நானே வியக்கும் அளவிற்கு 'சந்திரமுகி'யின் இசை பிரபலமாகிவிட்டது. என்னோட கேரியரில் இதுதான் சிறந்த படம். இதற்கெல்லாம் காரணம் வாசுசார், தயாரிப்பாளர்கள், ரஜினி ஆகியோர்தான்.
'சந்திரமுகி'யின் பின்னணிக்காக மட்டும் 31 நாள் காலம் எடுத்துக்கொண்டேன். மொத்தம் 80 கலைஞர்கள் இசை சேர்ப்பு பணியில் இருந்துள்ளனர்" என உழைப்பின் பலனை பெருமை பொங்க சொன்னார் வித்யாசாகர்.
கடைசியாக பேசிய இளையதிலகம்....
"அப்பா இறந்த பிறகு நடிப்பில் இன்னொரு ரவுண்ட் வரவேண்டும் என்று நினைத்தேன். அது 'சந்திரமுகி' மூலம் நிறைவேறியது. இதற்கு காரணம் என் அண்ணன்களான ராம்குமார், ரஜினி, கமல் மற்றும் நண்பர் வாசு ஆகியோர்தான்" என பிரபு உணர்ச்சி வசப்பட்டு உதிர்த்த வார்த்தைகளில் நன்றியின் சாரல்.
முடிவில் "மறக்காம 'சந்திரமுகி' வெற்றிவிழாவுக்கு வந்திடுங்க..." என நிருபர்களுக்கு அழைப்பிதழை கொடுத்து அழைத்தார் ராம்குமார்.
|