'ராமுடு மஞ்சு பாலுடு' தெலுங்கு படத்தில் நடித்துக் கொண்டிருந்தபோது திடீரென்று காணாமல் போனார் ப்ரீத்தி வர்மா. திடீர் திடீரென்று மர்ம படம் மாதிரி அவரிடமிருந்து கடிதம் மட்டும் வந்தது. எனினும் இதுநாள்வரை ப்ரீத்தி இருக்கும் இடம் தெரியவரவில்லை. அவரை வைத்து படம் தயாரிப்பவர்களும் நம்பிக்கை இழந்து விட்டனர்.
'ராமுடு மஞ்சு பாலுடு' படத்தின் பெரும் பகுதி முடிந்து விட்டது. ப்ரீத்தி வர்மா சம்பந்தப்பட்ட சில காட்சிகள் பாக்கி. அவர் வந்து நடிக்காமல் படத்தை முடிக்க முடியாது. சரி, அவருக்குப் பதில் வேறு ஒருவரை நடிக்க வைக்கலாம் என்றால் 90 சதவிகித படம் முடிந்து விட்டது. இருதலைக் கொள்ளி எறும்பாக இறுதியில் கவுன்சிலை சரணடைந்துள்ளார் படத்தின் தயாரிப்பாளர். "எனக்கு ஏற்பட்டிருக்கும் நஷ்டத்தை ப்ரீத்தி தரப்பு தர வேண்டும்" என்பது இவர் கோரிக்கை.
தமிழில் 'மூன்றாம் பவுர்ணமி', '18 வயசு புயலே' படங்கள் ப்ரீத்திக்காக காத்திருக்கின்றன. பொறுமையிழந்த தயாரிப்பாளர்கள் சிலர் ப்ரீத்தி வீட்டிற்கு போனில் தொடர்பு கொண்டு கொடுத்த அட்வான்சை திருப்பிக் கேட்டு வருகின்றனர்.
"ப்ரீத்தி எங்கே இருக்கிறாள் என்றே தெரியவில்லை. அப்படியிருக்க நாங்க எங்கேயிருந்து அட்வான்சை திருப்பிக் கொடுப்பது" என்கிறார் ப்ரீத்தியின் தாயார். எங்களையே ஒட்டாண்டியாக்கிட்டு ஓடிப் போயிட்டா இதுல இந்த தலைவலி வேறயா என கோபப்படுகிறார்கள் ப்ரீத்தி வீட்டில்.
மொத்தத்தில் நடிக்காமலே பீல்டை கலக்கிக் கொண்டிருக்கிறார் ப்ரீத்தி வர்மா!
|