பி.வாசுவின் கைவண்ணத்தில் குசேலனாக மாறிவருகிறது 'கதபறயும் போள்'. இப்படத்தை கவிதாலயா நிறுவனமும், செவன் ஆர்ட்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்து வருகிறது. கதையின் நாயகன் பசுபதி என்பதால் ரஜினி சிறப்பு தோற்றத்திலேயே வருவார் என ஆரம்பத்தில் வெளிவந்த செய்திகள், கவிதாலயா நிறுவனத்தின் வயிற்றில் புளியைக்கரைத்தது. இப்படி செய்திகள் வந்தால் வியாபாரம் நடத்துவது கஷ்டம் என்று ரொம்பவே ஃபீல் பண்ணியது.
இதனையடுத்து கதையில் நிறைய மாற்றங்கள் செய்து சூப்பர் ஸ்டாரின் படம் என்ற அடையாளத்திற்கு குசேலனை கொண்டு வந்தார் பி.வாசு. படத்தின் படப்பிடிப்பு தற்போது ராமோஜிராவ் பிலிம்சிட்டியில் படமாகி வருகிறது. ரஜினி-நயன்தாரா ஆடும் டூயட் காட்சி ஒன்று பிரமாண்டமாக செட் போடப்பட்டு படமாகியுள்ளது.
இந்நிலையில் 'குசேலன்' படப்பிடிப்பு முழுவதுமாக முடிவடையும்முன் நல்ல விலைக்கு விற்பனையாகியுள்ளது. இப்படத்தின் தமிழ், தெலுங்கு விநியோக உரிமையை ரூ.65 கோடிக்கு விலைகொடுத்து வாங்கி.யுள்ளது பிரமிட் சாய்மீரா நிறுவனம்.
குசேலனை வாங்கும் போட்டியில் பிரமிட் சாய்மீரா உட்பட மூன்று கார்ப்பரேட் நிறுவனங்கள் மோதின. ஒரு நிறுவனம் 53 கோடிக்கும், இன்னொரு நிறுவனம் 63 கோடிக்கும் குசேலனை விலைபேச, கடைசியில் 65 கோடி ரூபாய்க்கு 'குசேலனை' வாங்கியுள்ளது பிரமீட் சாய்மீரா.
இரண்டு மொழிகளிலும் சேர்த்து 'குசேலன்' தயாரிப்பு செலவு 35 முதல் 40 கோடி ரூபாய் வரைக்கும்தான் ஆகியிருக்கும் என்றும், 65 கோடிக்கு விற்பனையானதன் மூலம் கவிதாலயாவுக்கும், செவன் ஆர்ட்ஸ் நிறுவனத்திற்கும் தலா 15 கோடி லாபம் கிடைத்திருக்கும் என்றும் கூறப்படுகிறது.
|