படம் பார்த்துவிட்டு வரும் ரசிகர்களுக்கு படம் பிடிக்கவில்லை என்றால் பரவாயில்லை. கதையே புரியவில்லை என்றால்?
சங்கீதா, சீமா சம்பந்தப்பட்ட பிளாஷ்பேக் காட்சிகள் படத்தின் பிற்பகுதியிலும், சிம்பு வில்லனை பழிவாங்கும் காட்சிகள் முற்பகுதியிலும் இருப்பதுபோல் திரைக்கதை அமைத்திருந்தார் இயக்குனர் தருண்கோபி. இந்த 'ஸிக்ஜாக்' திரைக்கதையை சரியாக அமைக்காததால் பலருக்கு குழப்பம்.
இதனால் தமிழ்நாடு முழுவதும் 'காளை' ஓடும் திரையரங்குகளுக்கு கத்திரிக்கோலுடன் சென்ற 'காளை' யூனிட் சங்கீதா, சீமா சம்பந்தப்பட்ட தேனி காட்சிகளை படத்தின் முற்பகுதியிலும், சிம்புவின் பழிவாங்கல் காட்சிகளை பிற்பகுதியிலுமாக மாற்றி வைத்துள்ளனர். சிம்புவின் ஓபனிங் சீனாக 'கருப்பசாமி...' பாடல் வருகிறது.
"திரைக்கதையை ஒரே நேர்கோடாக மாற்றிவிட்டதால் அதிகளவு ரசிகர்கள் 'காளை' திரையரங்குக்கு வருகிறார்கள்" என்றார் தருண்கோபி.
'காளை' யில் அத்தை-மருமகன் உறவை தருண்கோபி கொச்சைப்படுத்தியதாக நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது. "அந்தமாதிரி எதுவும் நான் கொச்சைப்படுத்தவில்லை" என்று அடித்துச் சொல்லும் கோபி, இதனை நீதிமன்றத்தில் விளக்கிச் சொல்வேன் என்றார்.
|