சிம்ரன் சினிமாவில் இல்லையென்றாலும் அவரை ரசிகர்கள் விடுவதாயில்லை. சமீபத்தில் தனியார் தொலைக்காட்சி ஒன்றுடன் இணைந்து பிரமிட் சாய்மீரா நிறுவனம் போட்டி ஒன்று நடத்தியது. பெரியதிரை நட்சத்திரங்களில் யார் சின்னதிரையில் நடிக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள் என்பது கேள்வி. இதற்கு அதிகம்பேர் தெரிவித்த பதில், சிம்ரன்!
பிரமிட் சாய்மீரா பிரம்மனையே அழைத்து வந்து நடிக்க வைப்பார்கள். சிம்ரனை விடுவார்களா? 'சிம்ரன் திரை' என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியில் மார்ச் முதல் காட்சிதரப் போகிறார் சிம்ரன்.
இது கொஞ்சம் வித்தியாசமான நிகழ்ச்சி. மாதத்திற்கு ஒன்று என வருடத்திற்கு 12 கதைகள். இந்த பன்னிரெண்டு கதைகளிலும் கதாநாயகி, சிம்ரன், நவரசங்களை காட்டும் விதவிதமான கேரக்டர்கள்.
நிகழ்ச்சி பற்றி சொன்னதும் மறுபேச்சில்லாமல் ஒத்துக்கொண்டார் சிம்ரன். இதுபற்றி சிம்ரனிடம் கேட்டதற்கு,
"டி.டி. மெட்ரோவில் சூப்பர்ஹிட் முகாபுலா நிகழ்ச்சியில் தோன்றியதுதான் எனது முதல் நடிப்பு அனுபவம். பிறகுதான் சினிமாவுக்கு வந்தேன். நீண்ட இடைவெளிக்குப் பிறகு தொலைக்காட்சியில் நடிப்பது பரவசமாக இருக்கிறது" என்றார்.
|