ராடன் தயாரிப்பில் 'திருவிளையாடல்' தொடர்
- 29.04.2008
By Amalan
திருவிளையாடல்! இன மத பேதங்களைக் கடந்து தமிழ் மக்களின் மனதில் ஆழப்பதிந்திருக்கும் ஒரு சொல்.
|
|
|
முத்தெய்வங்களில் முதன்மையான இறைவன் சிவபெருமான், பலவேறு காரணங்களின் அடிப்படையில் தன்னை வழிபடும் பக்தர்களிடத்தில் நிகழ்த்திய சம்பவங்களே தமிழ்ச் சான்றோர்களால் 'திருவிளையாடல் என்று அழைக்கப்படுகிறது. முழு முதற்கடவுளாகிய சோம சுந்தரப்பெருமான் செய்தருளிய, செயற்கரும் செயல்களை விளையாட்டு என்று பழங்காலம் தொட்டே தமிழில் ஒரு மரபாக வழங்கி வருகிறார்கள்.
இத்தகைய திருவிளையாடல்கள், திருவிளையாடற் புராணம், சிவபுராணம், சிவமஹா புராணம், பெரியபுராணம், கந்தபுராணம் முதலான நூல்களில் இடம் பெற்றிருக்கின்றன. இவற்றிலிருந்து தேர்வு செய்யப்பட்ட சுவாரஸ்யமான கதைகளைத் தொகுத்து தமிழில் முதன் முதலாக ஒரு பிரமாண்ட முயர்சியாக திருவிளையாடல் நெடுந்தொடரை ராடன் நிறுவனம் தயாரிக்கிறது. வழக்கமான நெடுந்தொடர் பாணியிலிருந்து வேறுபட்டு பலவேறு சிவகதைகளின் தொகுப்பாக இத்தொடர் அமையும்.
மேலும், கைலாயம், இந்திர சபை, பாண்டிய மன்னர்களின் அரண்மனைகள், அசுர சபைகள், வெவ்வேறு ஆசிரமங்கள் என்று பல கோடி ரூபாய் செலவில் சினிமாக்களையும் மிஞ்சும் விதத்தில், செட்கள் போடப்பட்டு படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. தெய்வ பாத்திரங்களுக்கு ஏற்ப நடிகர்கள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கென விலை உயர்ந்த ஆடை அணிகலன்கள் தயாரிக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டுள்ளன.
இவை தவிர புராண கதைகளில் இடம் பெறும் மாயாஜாலக் காட்சிகளை திரையில் கொண்டு வருவதெற்கென்று சுமார் ஐம்பது பேர் கொண்ட கிராஃபிக்ஸ் குழு, இத்தொடருக்கெனவே பிரத்யேகமாகத் தேர்வு செய்யப்பட்டு பணியாற்றி வருகிறது.
சிவபெருமானாக ஸ்ரீதரும், உமாமகேஸ்வரியாக யமுனாவும், ஔவையாராக மனோரமாவும், நாரதராக ராதாரவியும், இந்திரனாக ப்ரிதிவிராஜனும், இந்திராணியாக யுவராணியும், தொடக்கக கதையில் முக்கிய கதாபாத்திரங்களாக நடிக்கிறார்கள்.
ஸ்ரீமான் கவிச்செல்வர் திரைக்கதை, வசனம் எழுதும் இத்தொடரை ராகேஷ் சின்ஹா இயக்குகிறார்.
|