விஜய்யும் அஜித்தும் இன்று எதிரெதிர் துருவங்களாக இருந்தாலும் ஒரு காலத்தில் சேர்ந்து நடித்தார்கள்தான். இப்போது இவர்கள் இருவரும் சேர்ந்து நடிப்பது என்பது ஆட்டுக்கு தாடி வளரும் கதைதான். ஆனால், விஜய்யும்-விக்ரமும் ஆரம்பத்திலிருந்தே ஒருவரையொருவர் நட்பு பாராட்டி வருகின்றனர்.
இந்நிலையில் இவர்கள் இணைந்து ஒரு படத்தை தயாரிக்க தயாரிப்பாளர் கலபாத்தி அகோரம் முயற்சி செய்து வருகிறாராம். இவர் 'திருட்டுப் பயலே', 'சந்தோஷ் சுப்ரமணியம்' படங்களை தயாரித்தவர்.
தன் விருப்பத்தை விஜய், விக்ரம் இருவரிடமும் அகோரம் பல மாதங்களுக்கு முன் தெரிவித்திருக்கிறார். கதை பொருத்தமாக அமைந்தால் நடிப்பதில் ஆட்சேபனை இல்லை என இருவருமே கருத்து தெரிவித்துள்ளனர். இந்நிலையில் விஜய்-விக்ரம் இருவருக்கும் பொருத்தமான ஐந்து கதைகளை தேர்வு செய்துள்ளார் தயாரிப்பாளர் அகோரம். அந்த கதைகளை கேட்க விஜய்யும், விக்ரமும் நேரம் ஒதுக்கியுள்ளதாக தெரிகிறது.
ஒருவேளை இருவரும் நடிப்பது உறுதியாகிவிட்டால், அப்படத்தை தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளிலும் தயாரிக்க திட்டமிட்டுள்ளாராம் தயாரிப்பாளர் அகோரம்.
|