நாளை மறுநாள் பிரஷாந்த் திருமணம் - முதல்வர் பங்கேற்கிறார்
30.08.2005
By: Amalan
கைகுலுக்கும் விஐபிகளிடமிருந்தெல்லாம் கல்யாண சாப்பாடு எப்போது? என்ற கேள்வியை சந்தித்துக் கொண்டிருந்த பிரஷாந்த் ஒரு வழியாக அந்த கேள்விகளுக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார்.
|
யெஸ். மணமகள் கிரகலஷ்மியை நாளை மறுநாள் கைப்பிடித்து இல்லற வாழ்வில் அடியெடுத்து வைக்கிறார்.
சென்னை சாந்தோம் நெடுஞ்சாலையில் உள்ள மேயர் ராமநாதன் சென்டரில் 1-ந் தேதி காலை 7.45 மணியிலிருந்து 9.15-க்குள் சுபமுகூர்த்தம் குறிக்கப்பட்டுள்ளது.
இந்த வைபவ செய்தியை பத்திரிகையாளர்களிடம் இன்று பகிர்ந்துக்கொண்ட பிரஷாந்த் தனது கையால் திருமண அழைப்பிதழ் கொடுத்தபோது முகத்தில் கல்யாண கலை தாண்டவமாடியது.
குணா கமல் ஸ்டைலில் மணமகளை நினைத்து பார்த்தாரோ என்னவோ அருவிபோல பேச ஆரம்பித்தவர், திடீரென வெட்கத்தில் வார்த்தை முட்டி நின்றார். மகனின் வெட்கத்தை புரிந்துகொண்ட தியாகராஜன் திருமணம் பற்றி விலாவாரியாக விளக்கினார்.
"பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காதுன்னு சொல்லுவாங்க. எங்க வீட்ட பொருத்தவரை வரும் 1-ந் தேதி பெண்ணும் கிடைக்கப்போகுது புதனும் கிடைக்கப்போகுது. திருமணத்தை தடபுடலா நடத்த திட்டமிட்டுள்ளோம்.
எல்லா விஐபிகளுக்கும் அழைப்பிதழ் கொடுத்துள்ளோம். அன்று மாலை நடக்கவுள்ள திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் முதல்வர் ஜெயலலிதா கலந்துகொண்டு வாழ்த்தவுள்ளார். தி.மு.க. தலைவர் கருணாநிதி உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்களும் கலந்துகொள்வார்கள்.
கோலிவுட் மட்டுமில்லாமல் பாலிவுட் நட்சத்திரங்கள் பலரும் திருமணத்தில் கலந்துகொள்வார்கள். அமிதாப்பச்சன், ஐஸ்வர்யாராய் ஆகியோரும் வருவதாக கூறியுள்ளனர்.
திருமணத்தையொட்டி இசையமைப்பாளர்கள் தேவா, ஸ்ரீகாந்த் தேவா, சபேஷ் - முரளியின் இன்னிசை நிகழ்ச்சி நடக்கவுள்ளது" மருமகள் வரும் சந்தோஷத்தில் கலகலவென பேசிய தியாகராஜனிடம் பிரஷாந்திற்கு உங்களின் திருமண பரிசு என்ன? என்றபோது "என் முழு அன்பும் இருக்கும்போது அதை விட சிறந்த பரிசு என்ன இருக்க முடியும்" என சிரித்தவர், புதிய மாளிகை ஒன்று பரிசளிக்கப் போவதாக கூறினார்.
உங்கள் வருங்காலத்திடம் பேசினீர்களா...? பிரஷாந்திடம் கேட்டால், "ம்... பேசினேன், பேசினோம். பேசிக்கொண்ட இருப்போம்" என எப்.எம். காம்பயர் போல அடுக்கிக்கொண்டே போக அட்வான்ஸ் வாழ்த்துக்கள் சொல்லி விடைபெற்றோம்.
முக்கியமா ஒரு விஷயம் சொல்ல மறந்தாச்சு.... ஹவாய் தீவு ஆஸ்திரியா ஆகிய இடங்களில்தான் பிரஷாந்த் தேனிலவு கொண்டாடப்போகிறாராம்.
|